தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வளர்ந்துவரும் 'தெலங்கானா சூப்பர் ஸ்டார்' தேவரகொண்டா!

தென்னிந்திய சினிமாவில் தெலங்கானா சூப்பர் ஸ்டாராக வளர்ந்துவரும் விஜய் தேவரகொண்டா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரைப் பற்றி தொகுப்பு.

விஜய் தேவரகொண்டா

By

Published : May 9, 2019, 7:27 PM IST

அஜித், மாதவன், சூர்யா, விக்ரம், ஆர்யாவைத் தொடர்ந்து பெண்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் சாக்லேட் பாயாக தற்போது தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இடம்பிடித்துள்ளார்.

யார் இந்த விஜய் தேவரகொண்டா?

நடித்தது நான்கு படங்கள்தான் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வருவது அவரே நினைத்து பார்க்காத உச்சம்தான். 'நுவ்விலா', 'லைஃப் இஸ் பியூட்டிபுல்' ஆகிய படங்களில் துணை நடிகராக வலம்வந்த விஜய் தேவரகொண்டா முதன்முதலாக 'பெல்லி சூப்லு' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. மிக அழகாக யதார்த்தமான எடுக்கப்பட்ட இப்படம், வெட்டியாக சுற்றித் திரியும் இளைஞனின் வாழ்க்கையை வெளிக்காட்டும் படமாக வந்த 'பெல்லி சூப்லு' எதிர்பாராத வெற்றியை பெற்றது.

அர்ஜீன் ரெட்டி படப்பிடிபபு

இப்படம் சிறந்த திரைக்கதை, வசனம் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதை பெற்றது. மேலும், தான் நடித்த முதல் படமே தேசிய விருது பெற்றதால் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெறத்தொடங்கினார் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில், தனது இரண்டாவது படமான 'அர்ஜுன் ரெட்டி' 2017இல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதுவரை தெலுங்கு சினிமாவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கமர்ஷியல் ஃபார்முலாவை உடைத்தெறிந்து தனது நடிப்பின் மூலம் தென்னிந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். 'அர்ஜுன் ரெட்டி' கரடு முரடாக தான் நினைத்ததை செய்ய நினைக்கும் மனோபாவம், எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பாராததை செய்யும் கதாநாயகனின் கதாபாத்திரம். தெலுங்கு மட்டும் அல்ல தமிழ், மலையாள சினிமா ரசிகர்களிடையே இப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம் தான் யார் என்று திரையுலகிற்கு பலமாக பறைசாற்றினார் தேவரகொண்டா.

அர்ஜீன் ரெட்டி பட போஸ்டர்

தெலங்கானாவின் வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த விஜய் தேவரகொண்டா!

இதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்', 'டாக்ஸிவாலா' ஆகிய படங்கள் வசூல் சாதனை படைத்தன. அவர் நடித்த நான்கு படங்களின் வெற்றி விஜய் தேவரகொண்டாவை தெலுங்கு சினிமாவின் உச்சாணிக்கு கொன்றுசென்றது.

கீதா கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற 'இன்கேம் இன்கேம்' பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. விஜய் தேவரகொண்டா மீது பிரேமம் கொண்டுள்ள ரசிகர்கள் அவரை தெலங்கானா சினிமாவில் வளர்ந்து வரும் 'சூப்பர் ஸ்டார்' என கொண்டாடிவருகின்றனர்.

மேலும், தமிழில் இவரது நடிப்பில் வெளிவந்த 'நோட்டா' திரைப்படம் தோல்வியடைந்தது. அந்தத் தோல்வியை தனது தோல்வியாக ஏற்றுக்கொண்டதும் மட்டும் அல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றி விட்டேன் என மன்னிப்பு கேட்டு தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

விஜய் தேவரகொண்டா

தங்களது முதல் நாயகனை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் தெலங்கானா சினிமா ரசிகர்கள்

திரைச்சீலையில் நெகட்டிவாக நடித்தாலும் ரசிகர்களுக்கு சாக்லேட் பேபியாக பாசிட்டிவ் எனர்ஜியையே தந்தார். தென்னிந்தியாவின் 'மாடர்ன் மேடி' என்றால் அது விஜய் தேவரகொண்டாதான். தெலுங்கு சினிமாவில் முதன் முறையாக தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு பையன் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வருவது எதிர்பார்க்காத ஒன்று.

மேடைகளில் ரசிகர்களை பேசி மயக்கும் இந்த நாயகனை, அம்மாநில மக்கள் நம்ம தளபதி மாதிரி (அரசியல் தளபதி இல்லைங்கோ... நம்ம இளையதளபதிதான்) பக்கத்து வீட்டு பையன்போலதான் பார்க்கின்றனர். குறுகிய காலத்தில் ரசிகர் பட்டாளத்தை அபரிமிதமாக பெருக்கிக்கொண்ட விஜய் தேவரகொண்டாவை நினைத்து உண்மையில் பெருமைப்படுவது அவரது தந்தை கோவர்த்தன்-தானாம்.

தனது தந்தையின் கனவை நனவாக்கிய தனயன்

காரணம், அச்சம்பேட்டையில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்த கோவர்த்தன், நாயகனாக நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். ஆனால் அவரது கனவு வெறும் ஆசையாகவே போனது. தனது தந்தை கோவர்த்தனின் கனவை நனவாக்கினார் தனயன் விஜய் தேவரகொண்டா. தான் பெரிய நடிகன் என்ற கர்வம் ஏதும் இல்லாமல் நட்புடன் எளிமையாக மக்களுடன் பழகி வருகிறார்.

மாடர்ன் மேடி விஜய் தேவரகொண்டா

நடிகன் என்பது நிரந்தரம் இல்லை. திரையில் வேறு-நிஜத்தில் வேறு என்பதை அவ்வப்போது விஜய் தேவரகொண்டா நினைவுக் கூர்ந்துகொள்வாராம். திரையில் பெண்களுடன் சுற்றி இருந்தாலும் ஆண் நண்பர்களோடு ஊர் சுற்றுவதுதான் விஜய் தேவரகொண்டாவிற்கு மிகவும் பிடிக்கும்.

தேவரகொண்டாவின் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த நானி!

சினிமாவில் தனக்கு ஒரு பிரச்னை என்றால் நடிகர் நானியைத்தான் நாடுவாராம். 'தோள்கொடுப்பான் தோழன்' என்ற ஃபார்முலாவை இன்றுவரை விஜய் தேவரகொண்டா கடைப்பிடித்து வருகிறார். கவலைப்பட்ட நேரத்தில் உதவியவனை மறக்காத அன்பானவனாக இருந்துவருகிறார். ஏனென்றால், சினிமா வாய்ப்புகள் தேடிதிரிந்த காலத்தில் நானிதான் தேவரகொண்டாவுக்கு பக்கபலமாக இருந்துள்ளார். தேவரகொண்டாவுக்கு பிரச்னைகள் ஏற்படும்போதெல்லாம் ஆறுதல் கூறுவதோடும் அதற்கு தீர்வையும் கூறி அவரை திடப்படுத்தியவர் நானி என்றால் அது மிகையல்ல. 'நானி, எனது ஒரு உடன்பிறவா சகோதரன், நான் மதிக்கும் தோழன்' என்று தேவரகொண்டாவே பலமுறை கூறியுள்ளார்.

தந்தை அன்று சொன்னது ஞாபகம் இருக்கு....

சினிமா சினிமா என்று அலைந்து கொண்டிருந்த விஜய் தேவரகொண்டாவிடம் அவரது தந்தை கூறியது இன்றும் தன்னால் மறக்கவே முடியாது என்று அவர் கூறியுள்ளார். 'காசே இல்லாம சுத்துறது சுதந்திரம் இல்லை. ஆனால் உனது 30 வயதில் 30 ரூபா கூட உனது அக்கவுண்ட்டில் இல்லைனா குளோஸ் ஆவது உனது அக்கவுண்ட் மட்டுமல்ல... உனது வாழ்க்கையும்தான்' என்று அவரது தந்தை கூறினாராம். தற்போது விஜய்க்கு 30 வயது. அவர் இந்தியாவில் பணக்காரர் பட்டியலில் 72ஆவது இடத்தை பிடித்திருப்பது ஆகப்பெரிய சாதனைதான்.

கனவுகளோடு கதைபேச வந்த இந்த நாயகன் தனது 30ஆவது பிறந்தநாளை இன்று மகிழ்வோடு கொண்டாடினார். வாழ்த்துகள் தெலங்கானா சூப்பர் ஸ்டார் மிஸ்டர் விஜய் தேவரகொண்டா!

ABOUT THE AUTHOR

...view details