கவிஞர் வைரமுத்துவின் 38ஆவது படைப்பான "தமிழாற்றுப்படை" குறித்து சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
”தமிழுக்கு வெற்றிடம் இருந்தால் அதை தமிழாற்றுப்படை நிரப்பும். ஜூலை 12ஆம் தேதி காமராஜர் அரங்கத்தில் என்னுடைய 38ஆவது படைப்பான "தமிழாற்றுப்படை" வெளியிடப்பட உள்ளது. எந்த நூலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்நூலுக்கு உண்டு. அவை 'விழி புத்தகமாகவும்' 'ஒலி புத்தகமாகவும்' வெளியிடப்பட உள்ளோம். 360 பக்கம் கொண்ட "தமிழாற்றுப்படை" என் குரலுடன் மெல்லிய இசை சேர்த்து ஒலி வடிவில் வெளியிடப்படுகிறது. தமிழர்கள் சற்று புத்தகம் வாசிப்பை விட்டு விலகி இருப்பதாக என் மனதில் தோன்றியது, அதன் சாயலாக அமைந்ததுதான் இந்த ஒலி புத்தகம்.
பெற்ற குழந்தைகளுக்காக சம்பாதிக்கும் பெற்றோர்கள், குழந்தைகளை பார்க்க மறந்துவிட்டார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழை கற்று கொடுக்க இந்த ஒலி புத்தகம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். தமிழுக்கு வெற்றிடம் இருந்தால் அதை நிரப்பும் பொருட்டாக "தமிழாற்றுப்படை" இருக்கும்.
நான் எழுதிய 37 படைப்புகளில், என்னுடைய 17 புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி. ஆனால் இன்று அவர் இல்லையே என்ற ஏக்கம் வருகிறது. ஆனால் தான் இல்லாத இடத்தை தன் மகனை வைத்து அவர் நிரப்புவார் என அவர் சொன்னதுபோல் என் ஆழ்மனதில் தோன்றுகிறது. அதிகப்படியான எதிர்ப்புகளை கடந்து வந்தது தான் 'தமிழாற்றுப்படை'. எனக்கு எதிர்ப்புகளை தந்தவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். அவர்களின் மீது வருத்தம் உண்டே தவிர பழிவாங்கும் எண்ணம் இல்லை” என்றார்.