இயக்குநரும், தயாரிப்பாளருமான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா ஆகஸ்ட் 3ஆம் தேதி “தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்" தொடங்கினார். இந்த அமைப்புக்கு www.TFAPA.com எனும் பெயரில் இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு இன்று (ஆகஸ்ட் 28) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தளத்தில் 1931ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களின் பெயர்கள், அதன் தயாரிப்பாளர்கள், நடித்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், படம் பற்றி இதர தகவல்களும் இடம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தங்களின் திரைப்படத்திற்கு தலைப்புகளை பதிவு செய்ய தயாரிப்பாளர்கள், இந்த இணைய தளம் மூலம் நேரடியாக பதிவு செய்யும் வசதியை வெகு விரைவில் அறிமுகம் செய்ய இந்த புதிய சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
"தமிழ்நாடு அரசு திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்குவதற்கான அனுமதியை விரைவில் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சங்கம் உள்ளது. கரோனாவால் தடைபட்ட படப்பிடிப்புகளை மீண்டும் நடத்துவதற்கு தயாரிப்பாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் என பிற உதவிகளையும் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மேற்கொள்ள இருக்கிறது. திரையரங்குகளில் டிக்கட் விற்பனையில் வசூலிக்கப்படும் 8 விழுக்காடு உள்ளூர் வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் முறையிட்டு இருக்கிறோம். வெகு விரைவில் அது நீக்கப்பட்டு, ஒரு நல்ல தீர்வு அரசிடம் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் உள்ளோம்.