இஸ்லாமியர்கள் இன்று (மே 14) ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனை சிறப்பிக்கும் விதமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் ஆகியோர் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பாடியுள்ளனர்.
'தலா அல் பத்ரு அலைனா' எனப் பெயரிடப்பட்டுள் இந்த இசை ஆல்பத்தை யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான 'யூ1' தயாரித்துள்ளது. இது முகமது நபிகளை புகழும் ஒரு படலாகும்.
இந்தப் பாடல் மதீனா நகரின் மக்கள், முகமது நபிகளைப் போற்றி, தங்கள் மதீனா நகருக்கு வரவேற்று பாடிய வரலாற்று கவிதைப் பாடலை அடிப்படையாக கொண்டது. மதீனா நகரில் உருவான இப்பாடல் உலகம் முழுக்கவே மிகவும் புகழ் பெற்றது.
இந்தப் பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா கூறுகையில், "இந்த தருணத்தில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். 'தலா அல் பத்ரு அலைனா' போன்ற தெய்வீகப் பாடலை இசையமைப்பது எனக்குக் கிடைத்த பெருமையே. ஏ.ஆர். அமீனுடன் இது போன்ற ஆன்மீக பாடலை இணைந்து பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்மைச் சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்க, இப்பாடல் நம் ஆன்மாவில், மலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும்" என்றார்.
இவரைத்தொடர்ந்து ஏ.ஆர். அமீன் கூறுகையில், " நபிகளை போற்றும் தெய்வீகமான பாடலை அன்புச்சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மனதிற்கு மிகப்பெரும் மகிழ்வைத் தந்துள்ளது. இந்த இனிய ஈகைத் திருநாள் அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதியையும் அருளட்டும்" என்றார்.
'தலா அல் பத்ரு அலைனா' இசை ஆல்பம் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் தேவையுள்ள ஏழை, எளியோருக்கு அளிக்கப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பாடலின் முழு வீடியோ வடிவம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.