சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. திரைப்படம் வெளியானதிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த இந்தப் படத்தில் பரேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ், ஊர்வசி, விவேக் பிரசன்னா உள்ளிட்டப் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஓடிடி தளத்தில் தமிழில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாகும்.
’சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ பிசினஸ் செய்து ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது. அதுமட்டுமல்லாது, இந்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பொதுப் பிரிவில் தேர்வானது. அதுமட்டுல்லாது ஓடிடி தளத்தில் 50 மில்லியன் பேர் பார்த்த படம் என்ற சாதனையை 'சூரரைப் போற்று' பெற்றது.
இந்தியில் வெளியாகும் 'சூரரைப் போற்று' அமேசான் ப்ரைமில் இந்தப் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இதையடுத்து ஏப்ரல் 4ஆம்தேதி இந்தப் படம் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.
தமிழ்த் திரைப்படம் ஓடிடி தளத்தில் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாவது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.