தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 13, 2020, 9:35 PM IST

ETV Bharat / sitara

'உயிருக்கு பயந்து காணொலி மூலம் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களை தேர்வு எழுத சொல்கிறது' - சூர்யா காட்டம்

நீட் அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா
சூர்யா

நீட் அச்சம் காரணமாக நேற்று (செப்.12) ஒரே நாளில் தமிழ்நாட்டில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில் கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்துபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில்கூட எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.

நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோருக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்விமுறையில், இனி பெற்றோரும், ஆசிரியர்களுமே விழிப்புடன் இருக்கவேண்டும்.

நமது பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. இந்த நியாயமற்ற தேர்வுகளுக்கு அவர்களைத் தயார்ப்படுத்த துணை நிற்பது போலவே. மாணவர்கள் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளவும் தயார்ப்படுத்த வேண்டும். அன்பு நிறைந்த குடும்பம், உறவு, நண்பர்கள் சூழ்ந்த அற்புதமான இந்த வாழ்விற்கு முன்பு, தேர்வுகளின் முடிவுகள் அற்பமானது என்பதை உணர்த்துவது முக்கியம்" என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details