தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 15, 2019, 11:22 AM IST

ETV Bharat / sitara

‘சினிமாவை பயன்படுத்தி அரசியலில் ஜெயிக்க முடியாது’ - பேரரசு பிரத்யேக பேட்டி!

'சினிமா என்கிற ஒரு ஆயுதத்தை தூக்கிக் கொண்டு அரசியலில் இறங்கி ஜெயித்துவிட முடியாது' என்று நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பேரரசு

பரபரப்பாக இயங்கி வரும் தமிழக அரசியல் களத்தின் நிலவரம் குறித்து இயக்குநர் பேரரசு நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு,


கேள்வி: தேர்தல் நேரத்தில் நடிகர், நடிகையர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது இதுகுறித்து?


பதில்: ஒரு கட்சியில் ஒருவர் பிரசாரம் செய்யப் போகிறார் என்றால் முதலில் அவர் அக்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். அந்த கட்சியில் அவருக்கு முழு ஈடுபாடு இருக்க வேண்டும். கட்சியில் ஈடுபாடும் பிடிப்பும் ஏற்பட்டு, அதன் பிறகு தான் பிரசாரம் செய்ய வேண்டும். அதுதான் உண்மையான பிரசாரமாக இருக்குமே தவிர நட்புக்காக, பணத்திற்காக, சுயநலத்திற்காக பிரசாரம் செய்வதில் உண்மையில்லை. அது வெறும் நடிப்பு மட்டுமே. தேர்தலில் பணம் பெற்றுக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபடுவதும் நடிப்புதான். இது மக்களை ஏமாற்றுவதற்கு சமமானது. அதை நம்ப வேண்டாம்.

இயக்குநர் பேரரசு பிரத்யேக பேட்டி


கேள்வி: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் ஒரு காணொளியில் மு.க.ஸ்டாலின் பேச்சைக் கேட்டு கோபப்படுவது போன்று வெளியாகியிருக்கிறது. இது குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: அரசியல் தலைவர் என்ற தகுதி சும்மா வந்து விடாது. பல ஆண்டுகளாக மக்களோடு மக்களாக வாழ்வதன் மூலம் வருவதுதான் அரசியல் தலைமை. திடீரென்று கட்சி ஆரம்பித்து திடீரென்று தலைவர் ஆகுபவர்களுக்கு இந்தப் பக்குவம் வராது. அரசியலில் இருப்பதற்கு தகுதி எந்தவிதமான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்வதுதான்.

சினிமாவிலும் விமர்சனங்கள் வரும் அதை தாங்கிக் கொண்டவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். சினிமா என்பது குளம். அரசியல் என்பது கடல் விமர்சனங்கள் நான்கு பக்கத்திலும் சுழற்றியடிக்கும். இதைத் தாங்கிக் கொள்பவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும். இதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இல்லை.

பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால், கோபம் இருக்கக் கூடாது. நிறைய பேர் மானம் மரியாதையை தூக்கி வைத்து விடுகிறார்கள். இவர் கோபத்தை மட்டும் தூக்கி ஓரமாய் வைக்கலாம்.

இன்னும் பல பிரச்சினைகளை பார்க்க வேண்டிய நிலையில், இதை கூட தாங்கிக் கொள்ள முடியாதா என்று கமல் மீது மக்கள் வைத்த நம்பிக்கை போய்விடும் . சினிமா என்கிற ஒரு ஆயுதத்தை தூக்கிக் கொண்டு அரசியலில் இறங்கி ஜெயித்துவிட முடியாது.

மனிதனுக்கு கோபம் வருவது இயற்கை தான். ஆனால் இந்த சூழ்நிலையில் வரக்கூடாது. கோபம் வராத தலைவர்களே இல்லை. ஆனால் அந்தக் கோபம் நான்கு சுவற்றுக்குள் இருக்கும். 4 லட்சம் பேருக்கு தெரிகிற மாதிரி இருக்காது. 4 லட்சம் மக்களுக்கும் தெரிவது போன்று கமல்ஹாசன் நடந்து கொண்டார்” என முடித்துக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details