ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட எஸ்.பி.பி. முதலில் பாடவந்தது தமிழில்! அப்போது அவருக்குத் தமிழ் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை என்று இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. கூற, உடனடியாகத் தமிழை முறையாகக் கற்றுக்கொண்டார். அதன் பிறகு அடிமைப் பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஆயிரம் நிலவே வா" பாடலை முதல்முறையாகப் பாடினார்.
எந்த எஸ்.பி.பி.க்கு தமிழ் சரியாக வரவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டதோ அதே எஸ்.பி.பி.யைப்போல் தமிழைச் சரியாக பாட இன்று ஆளில்லை என்று கூறலாம். அவரது குரலில் மனிதனின் ஒட்டுமொத்த குணாதிசயங்களும் ஒளிந்திருக்கும்.
எஸ்.பி.பி. பாடும்போது இசையமைப்பாளர் கொடுத்துவிட்டார் அதைப் பாடிவிட்டுப்போவோம் என்று இல்லாமல் பாடல்களின் இடையில் சிரிப்பது, சிணுங்குவது என்று தன்னால் முடிந்த அளவு அப்பாடலை குரல்கொண்டு மெருகேற்றியிருப்பார். சொல்லப்போனால், ஒரு ஆணின் சிரிப்பை, சிணுங்கலைப் பெண்கள் ரசிக்க தொடங்கியது எஸ்.பி.பி.யிடமிருந்துதான். அதனால் ஒட்டுமொத்த ஆண் இனமும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது.
தமிழில் உள்ள சிறப்பும், சிக்கலும் அதனை உச்சரிப்பது. உச்சரித்தல் என்பது ஒவ்வொரு மொழியைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாடகரும் எச்சரிக்கையாய் இருக்கும் இடம். ஸ்ருதி தப்பலாம் ஆனால் மொழி தப்பினால் அப்பாடகர் ரசிகர்களிடம் மாட்டிக்கொள்வார். கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் எந்த மொழியில் பாடியிருந்தாலும், அந்த மொழிகளின் உச்சரிப்பை மிக நேர்த்தியாகக் கையாண்டவர் எஸ்.பி.பி..
அவரும், இசைஞானியும் சேர்ந்துகொண்டு இந்தத் தமிழுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் செய்த தொண்டு காலத்திற்கும் மறக்கவோ மறுக்கவோ முடியாதது. இளையநிலா பொழிகிறதே என்ற பாடலில் இளையராஜாவும், வைரமுத்துவும் போட்டிப்போட்டிருப்பார்கள். ஆனால், அவர்களின் போட்டியை எஸ்.பி.பி. தனது குரலால் வென்றிருப்பார்.
பொதுவாக இளையராஜா இசையமைக்கும் பாடலில் அவரே கதாநாயகனாக இருப்பார். ஆனால், ஞானியின் இசை எஸ்.பி.பி.யின் குரலிலிருந்து வரும்போது இசைஞானி-எஸ்.பி.பி. என்ற இரண்டு கதாநாயகர்கள் உருவாகி இருப்பார்கள், திரையில் நாம் பார்ப்பதெல்லாம் மூன்றாம் கதாநாயகர்களே.
புன்னகை மன்னன் திரைப்படத்தில் ’என்ன சத்தம் இந்த நேரம்’ பாடல் ஒரு அலாதி அனுபவத்தை கொடுக்கக்கூடியது. ஏனெனில் மெட்டும் சரி, வரிகளும் சரி ஒருவிதமான அமைதியைக் கொண்டிருப்பது. ஆனால் அந்த அமைதியை தனது குரல் மூலம் எஸ்.பி.பி. ரசிகர்களுக்கு கொண்டுசேர்த்திருப்பார். அப்படிச் செய்வதெல்லாம் சாதாரண விஷயமல்ல.
தளபதி திரைப்படத்தில், ’ராக்கம்மா கையத்தட்டு’ பாடலை அமைதியாக ஆரம்பித்து, பாடலின் சரணத்தை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு கொண்டுசென்றிருப்பார் இளையராஜா. அந்த மீட்டரை சரியாகப் பிடித்து, வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஒளி விளக்கேற்று வரியிலும், வைக்கிற வனம் அந்த வானையே தைக்கனும் தம்பி விடு நேராக வரியிலும் எஸ்பிபி அதகளம் செய்து கொண்டாட்டத்தை, அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருப்பார்.
அதேபோல், ’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலில் அவரின் குரல் பகலிலும் ஒரு மாலையை கொடுக்கக்கூடியது. இந்த ஒரு பாட்டுக்காகவே அவரை தோளில் தூக்கிவைத்து ஆட வேண்டும்.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் யாரின் ரசிகனாக இருக்கலாம். ஆனால், அவர்களது ரசிப்பு பயணம் சச்சினிடத்திலிருந்து ஆரம்பித்திருக்கும். அதுபோல்தான் எந்தப் பாடகருக்கும் யார் வேண்டுமானாலும் இப்போது ரசிகர்களாக இருக்கலாம் ஆனால், அவர்களது ரசிப்பு பயணம் எஸ்.பி.பி.யிடமிருந்து தொடங்கியிருக்கும். ஒரு விஷயத்தை தொடங்கிவைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.