ரஜினியின் 168ஆவது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார். முன்னதாக 'எந்திரன்', 'பேட்ட' படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது ரஜினியின் மூன்றாவது படத்தினை தயாரிக்கவுள்ளது.
இயக்குநர் சிவா கார்த்தியை வைத்து 'சிறுத்தை' படத்தினை இயக்கினார். அதனையடுத்து, 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என அடுத்தடுத்து அஜித்தை வைத்து இயக்கினார். தற்போது ரஜினியின் 168ஆவது படத்தை இயக்கவுள்ளார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைப்பார் என்று தயாரிப்புக் குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது நகைச்சுவை நடிகர் சூரி நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கனவு நிறைவேறிவிட்டது. நன்றி. அவரோட செல்ஃபி எடுத்தாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ஆனா இப்போ அவரோட சேர்ந்து நடிக்கிறது சந்தோஷத்தோட உச்சத்துல இருக்கேன் நன்றி. சன் பிக்சர்ஸ் பேனரில் இரண்டு படம் நடித்ததில் மகிழ்ச்சி. இயக்குநர் சிவாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். சிவா, சன் பிக்சர்ஸ், தலைவர் சேர்ந்தா தெறி மாஸ். இந்த கூட்டணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தற்கு மிக்க நின்றி’ என தெரிவித்திருந்தார்.