நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்து அமைந்துள்ளது சிங்கம்பட்டி. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஜமீனாக வலம்வந்த பகுதியாகும். அந்த ஜமீன் ஆளுகைக்குள்பட்ட பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் ராஜாவாக முடிசூட்டப்படுவது மரபு.
அத்தகைய சிங்கம்பட்டியின் 31ஆவது ராஜா பட்டம் பெற்றவரும், மன்னராட்சி காலத்தில் முடிசூடிய தமிழ்நாட்டின் கடைசி ராஜாவுமாகத் திகழ்ந்தவர் சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி.
இவர்தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவர் நேற்றிரவு (24-05-2020) வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.
இவருக்கு மூன்றரை வயதில் முடிசூட்டப்பட்டது. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகேஸ்வரன், சங்கராத் பஜன் ஆகிய மகன்களும்; அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர்.
1952ஆம் ஆண்டு ஜமீன் ஒழிப்புச் சட்டம் வரும்வரை, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்துவந்தது. மேலும், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்பட 8 கோயில்கள் சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்தன.