நமக்குள் உருப்பெற்று வெளியே எடுத்துரைக்க முடியாத நிலையில் காதலை, காமத்தை, பிரிவின் வலியை, மையலை, கொண்டாட்டத்தை, சோகத்தை, கோபத்தை, ஏக்கத்தை, பக்தியை என நம்மை அறியாமலே நமது உணர்வை அறிந்த ஒருவர் அது குறித்து நமக்கு ஆறுதலாய் பேசினால், அந்த உணர்வுகளை இன்னுமொருபடி மேலே சென்று அதை கலையாக மாற்றினால் அவர் நம்மையறியாமலேயே நமக்கு நெருக்கமாவார். அவரிடம் சரணடைவோம்..
அப்படி தமிழ் திரையிசை உலகின் ரசிகர்கள் விரும்பித் தேடிப் போய் சரணடையும் ஒருவர் ஸ்வர்ணலதா. தெளிவான தமிழில் தேன்சொட்டும் தன் குரல் இனிமையால் நம்மை மனித உணர்வின் ஆழத்திற்கு அழைத்து செல்லும் இசைக்குயில் ஸ்வர்ணலதாவின் பிறந்த நாள் இன்று !
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்வர்ணலதாவின் தமிழ் உச்சரிப்பில் பாலக்காட்டின் நளினத் தாக்கம் ஒருபோதும் இருந்ததில்லை. அதுவே அவரை தனது 14ஆவது வயதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் கலைஞர் மு.கருணாநிதி கதை வசனத்தில் 1987ஆம் ஆண்டில் வெளியான ‘நீதிக்கு தண்டனை’ படத்தில் பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை யேசுதாசுடன் இணைந்து பாடவைத்தது.
தமிழ் திரைப்படப் பாடலைப் பாடுவதற்கு சரியான தமிழ் உச்சரிப்புதான் முதல் தகுதியென கருதியவர் எம்.எஸ்.வி. அவரிடம் முதல் பாடலிலேயே பாடும் வாய்ப்பைப் பெற்ற ஒரே பாடகி ஸ்வர்ணலதாதான்.
குழந்தை பருவத்தில் மேடைகளில் பாடல் பாடும் ஸ்வர்ணலதா 1980ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரையிசையில் ஒரு பக்கம் எஸ்.ஜானகி, இன்னொரு பக்கம் சித்ரா என இசை கட்டிப் பறந்தபோது தனது எளிமையான குரல் வளத்தை வைத்து இருவருடனும் சேர்ந்து பறக்க ஆரம்பித்தார்.
தனித்துவமான குரலால் இசைஞானி இளையராஜாவை கவர்ந்த இவர் 1988ஆம் ஆண்டில் வெளியான குருசிஷ்யன் படத்தில் “உத்தமப் புத்திரி நானு” என்னும் பாடலைப் பாடினார். இசை மீது கொண்ட ஆர்வமும், ஈடுபாடும் பின்னாளில் அவரை இசைஞானிக்கு மிகவும் பிடித்த ஆதர்ச பாடகியாக்கியது.
தான் இசைக்கும் ஒவ்வொரு படத்திலும் இவரது குரல் ஒலிக்க ஸ்வர்ணலதாவுக்கென்றே பாடல்களை ஒதுக்கினார் ராஜா. அடுத்தடுத்து வந்த வெற்றிப்பாடல்கள் இவரை தமிழிசை உலகின் “கானக் குயில்” நிலைக்கு கொண்டு சேர்த்தது. வாக்கியப் பிழையாக இதனை நீங்கள் உணர்ந்தால், இவரது குரலால் அந்தப் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தன என எடுத்துக்கொள்ளுங்கள்.
டி.வி, இணையம் என எதுவும் இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஒரு பாடலின் வெற்றி என்பது அந்த பாடல் எத்தனை முறை வானொலியில் கேட்கப்படுகிறது என்பதில்தான் இருக்கிறது. அப்படி, ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகும் “நேயர் விருப்பம்” நிகழ்ச்சியில் குறைந்தது தொடர்ந்து 30 நிமிடங்கள் ஸ்வர்ணலதாவின் பாடல்கள் ஒலித்தன.
வாலி, வைரமுத்து, அறிவுமதி, பழநிபாரதி, நா.முத்துக்குமார், யுகபாரதி என்ற மூன்று தலைமுறை தமிழ்க் கவிஞர்களின் தமிழுக்கும் குரலால் இலக்கணம் சேர்த்தார்.
இளம் பருவத்தில் ஆர்மோனியம் வாசிக்கும் ஸ்வர்ணலதா எம்.எஸ்.வி, மணி ஷர்மா, கீரவாணி, மரகதமணி, கார்த்திக் ராஜா, சிற்பி, எஸ்.ஏ. ராஜ்குமார், தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்ஷங்கர் ராஜா என யார் இசையமைத்தாலும் ஸ்வர்ணலதாவுக்கென்று ஒரு பாடலை ஒதுக்கும் அளவுக்கு அவரது குரல் இருந்தது.
தமிழ் இசை ரசிகர்களைப் பொறுத்தவரை, தங்களால் சொல்ல முடியாத சோகங்கள் சொல்லில் அடங்காத வலிகளுக்கு இளையராஜாவை துணைக்கு அழைத்துக்கொள்வார்கள். அவரும் வந்து இசையால் ஆறுதல் தெரிவிக்க ஸ்வர்ணலதா உடன் வந்து குரலால் உறங்க செய்வார்.
உறங்க வைத்த அவரால் "மாசி மாசம் ஆளான பொண்ணு" என்று உறங்கியவர்களை எழுப்ப முடியும்,"ஆட்டமா தேரோட்டமா" என்று எழுந்தவர்களை ஆட வைக்க முடியும்,"என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" என்று ஆடியவர்களை அமர வைக்கவும் முடியும். ஸ்வர்ணலதாவின் குரல் இப்படி பல தரங்களைக் கொண்டது.
Humming queen of India - கானக் குயில் ஸ்வர்ணலதா “வெடலப் புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு... அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ...” என்று ஸ்வர்ணலதா பாட ஆரம்பிக்கும்போதே அவரது குரல் தூது சென்று நினைவுகளை அழைத்துவந்து நமக்குள் அமர்த்தி வைக்கும்.
இசை எப்போதும் இறைவனின் நிலை என்ற கூற்று பல காலமாக உண்டு. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள பகுத்தறிவுவாதிகள் சமயத்தில் யோசித்தாலும், ஸ்வர்ணலதா பாடிய “நிரந்தரம்... நிரந்தரம்... நீயே நிரந்தரம் !” பாடலை கேட்கும்போது பரவாயில்லை ஸ்வர்ணலதாவுக்காக ‘கடவுள் இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே’என கூறும் நிலைக்கு அவர்களை அழைத்து செல்வார்.
காதலுக்கு எப்போதும் வரமும், சாபமும் கலந்ததுதான் மாலை. அதிலும் காதல் வந்த பெண்ணின் நெஞ்சம் மாலையில், கொஞ்சம் இல்லை நிறையவே ஏக்கத்தோடு காத்திருக்கும். அதை, மாலையில் யாரோ பாடலில் ஸ்வரத்தில் கொண்டுவந்து ஜீவனை குளிர வைத்தது இளையராஜா என்றால், ஜீவனை உறைய வைத்தது ஸ்வர்ணலதா.
அதிலும்,“வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற... வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற... வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை...” என்று அவர் பாடுகையில் காதல் பாடல் பாடுகிறாரா இல்லை கடவுள் வாழ்த்து பாடுகிறாரா என ஒரு நிமிடம் மனம் நிசப்தமடையும்.
முக்கியமாக, “ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை... நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேர் எழுது”என்று ஹை பிட்சில் அவர் குரலை ஏற்றும்போது செவிக்குள் மட்டும் மழை இறங்கும் அதிசயம் நிகழும்.
மணமுடித்து அடுத்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் எதிர்பார்ப்பு, ஏக்கம் போன்றவற்றை முழு நீள திரைப்படமாகவோ, இல்லை ஐந்து நிமிட இசையாகுவோம், மெட்டுக்கு கோர்த்த வார்த்தைகளாகவோ கடத்துவது எளிது. ஆனால், குரல் மூலம் அந்த ஏக்கத்தை கடத்துவது கடிது. அப்படி, அந்த கடிதான விஷயத்தை ஏதோ தனக்கு நெருக்காமனவர்களுக்கு எளிமையாக கடிதம் எழுதுவது போல் செய்திருப்பார் ஸ்வர்ணலதா.
“தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும்போது கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு” என்று சரணத்தை தொடங்கி,“போனவுடன் கடிதம் போடு, புதினாவும் கீரையும் சேரு, புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை ஏனென்றால் சுவர்தான் உண்டு தூரமில்லை” என்று அந்தச் சரணத்தை 60 வயதுடைய மூதாட்டி கேட்டாலும் அவரது தாயின் ஞாபகம் நிலை கொள்ளும்.
“பூவனத்தில் மரமுண்டு மரம் நிறைய பூவுண்டு பூ நிறைய தேனுண்டு பூப்பறிக்கப் போவோமா பூ மகனே கண்ணே வா...” இதனைக் கேட்கும் அனைவருக்கும் அவரவர் தாயின் மடியில் முகம் புதைக்கும் ஆறுதல் கிடைக்கும் .
அவர் பாடிய பாடல்கள் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்ததுதான். ஸ்வர்ணலதாவின் பாடல்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பாடலை பாராட்ட வேண்டுமென்றால் அவர் அணிந்திருந்த கிரீடத்தில் மேலும் வைர கல் சேர்ப்பது போன்றதுதான். அப்படிப்பட்டதுதான், “எவனோ ஒருவன் வாசிக்கிறான்”பாடல்.
காதலர்களுக்குள் ஊடல், காதலியைத் தேடி காதலன் வருகிறான் என்ற வழக்கமான கோலிவுட் காதல் பாடல் சூழ்நிலையில் ஸ்வர்ணலதாவின் குரல் சேர்ந்தபின்பு அந்தச் சாதாரண சூழலே அதிசய சூழல் ஆனது.
தெளிவான தமிழ் உச்சரிப்புக்கு சொந்தகாரி ஸ்வர்ணலதா அதிலும், ‘புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி’என்று வைரமுத்துவின் வரிகளுக்கு லதாவின் குரல்தான் கச்சிதம். புல்லாங்குழல் எப்போதும் தனித்திருக்கும் ஒரு கருவி. அதேபோல், ஸ்வர்ணலதாவும் கடைசிவரை தனித்தே இருந்தார். அந்த வரியை இப்போது கேட்டாலும் அவருக்காகவே வைரமுத்து எழுதினாரோ என்னவோ என தோன்றும்.. ஊடலுக்கு அப்படி என்றால் கூடலுக்கு “குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி” என இப்படி நமக்கு எது வேண்டுமானாலும் அதற்கு அவரது பாடல்கள் இருக்கும்.
தமிழ், தெலுங்கு , கன்னடம் , இந்தி , உருது , மலையாளம் , பெங்காலி , ஒரியா , படுகா உள்ளிட்ட 15 இந்திய மொழிகளில் ஏறத்தாழ 7,500க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இது வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான பெருமை மட்டுமல்ல பன்மொழி பேசும் மக்களிடம் அவர் பெற்ற ஆரவாரத்தின் குறியீடு !
எப்போதும் வண்ணமயமான ஆடைகளும், ஏராளமான நகைகளும், ஒப்பனைகளும் அணிந்து தோன்றினாலும் தனிமையிலும், மௌனத்திலும் உழன்று குரலை உருக்கி கொடுத்தவர்.
இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருது, தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான கலைமாமணி விருது , சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றிருந்தாலும் அவற்றை எல்லாம் விட பெரிய விருது தமிழ்நாட்டில் ஜானகி அம்மா என்ற ‘அம்மா’ அடைமொழிக்கு பிறகு அம்மா என்ற அடைமொழியை ஒரு பெருங்கூட்டம் வழங்கியது இந்த ஸ்வர்ணலதா அம்மாவுக்குதான்....
ஸ்வர்ணலதாவின் குரலால் இன்றும் போற்றப்படும் பாடல்கள் அவர் இப்படி ஒரு வரி பாடியிருப்பார், “இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்...”இதனை மாற்றிச் சொல்ல வேண்டுமென்றால் “இன்னிசை இன்றும் இருப்பதனால் என்றும் என்றும் ஸ்வர்ணலதா நிலைத்திருப்பார்”...
வி மிஸ் யூ ஸ்வர்ணலதா அம்மா ...
இதையும் படிங்க :‘ஆணவத்தை அன்பில் எரி’ - வைரலாகும் ஆதவன் நா. முத்துக்குமார் எழுதிய கவிதை