தமிழில் 2014ஆம் ஆண்டு வெளியான 'பூவரசம் பீப்பி' என்ற திரைப்படத்தை இயக்கியவர் பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவர் சமீபத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, சாரா அர்ஜூன் உள்ளிட்டவர்களை வைத்து 'சில்லுக் கருப்பட்டி' என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
டிவைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் வேலினி தயாரித்த இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் நகர பின்னணி கொண்ட நான்கு குறுங்கதைகளைக் கூறும் அந்தாலஜி வகை திரைப்படமாகும். இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
இதனையடுத்து ஹலீதா 'மின்மினி' படத்தின் தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தப்பிப் பிழைத்தவரின் குற்றம் என்பது எந்த அளவுக்கு உண்மை. நீங்கள் நேசிப்பவரின் கனவுகளை நனவாக்க எந்த அளவுக்கு துணை நிற்கின்றீர்கள்? அன்பு செலுத்துவதற்கும் வெறுப்பற்கும் மத்தியில் உள்ள மெலிதான கோடு என்ன? பெரியவர்களைவிட இளம் வயதினர் ஏன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள்? என்று என்னுள் இறங்கிய கேள்விகளுக்கு விடை காண நான் செய்யும் முயற்சியே 'மின்மினி'.
இளம் பருவத்தினர், தப்பு செய்தும் சிக்காதவரின் குற்றவுணர்வு, அன்பு மற்றும் வெறுப்பு இவற்றுக்கிடையே உள்ள மெலிதான வேறுபாடு, இளம் பருவத்தினரின் உணர்ச்சிகள் குறித்தெல்லாம் நிறைய கேள்விகள் எழுந்தாலும், இவற்றையெல்லாம் எளிமையாகவும் மென்மையாகவும் படத்தில் சொல்லியிருக்கிறேன்.