தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெண்ணியம் பேசும் 'ஷியாம் சிங்கா ராய்' திரைப்படம் - பாகுபலி

Shyam Singa Roy movie Review: தெலுங்கு நடிகர் நானி, இயக்குநராகவும் பத்திரிகையாளராகவும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் 'ஷியாம் சிங்கா ராய்' இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரைப்படம்
திரைப்படம்

By

Published : Jan 27, 2022, 8:31 PM IST

Updated : Jan 30, 2022, 10:58 PM IST

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகரான நானி, ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஷியாம் சிங்கா ராய்'.

இதில் நானியுடன் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆன்லைன் தளமான நெட்பிளிக்ஸில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரூ. 50 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், தற்போது தென்னிந்திய சினிமாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. பூர்வஜென்மத்தை (Reincarnation) மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

மையக் கருத்து

தெலுங்கு இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில், தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்த 'மாவீரன்' திரைப்படத்தைப் போலவே, இந்தத் திரைப்படத்தில் பூர்வஜென்ம வாழ்க்கை குறித்து காட்சிப்படுத்துவதாகப் படத்தின் இயல்பு உள்ளது.

மாவீரன் படத்தில், முன்ஜென்மத்தில் நிகழ்ந்தவற்றைப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின் நிகழ்காலத்தில் தொடர்வதாக இப்படத்திலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

மறைந்த தமிழ் இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ், அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியான 'அனேகன்' படத்தைப் போலவே, இந்தத் திரைப்படத்திலும் முன் ஜென்மத்தில் நடந்தவற்றை (psychiatrist) மனநல மருத்துவர் மூலமாக ஆராய்வதாக திரைக்கதையைக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

"ஷியாம் சிங்கா ராய்" திரைப்படத்தில் இருவேடங்களில் நடிகர் நானியின் நடிப்பு பார்வையாளர்களைப் படத்தின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் வெகுவாக ஈர்த்துள்ளது.

அதே நேரத்தில் சாய் பல்லவியின் அபாரமான நடிக்கும் திறனையும் அவரின் அசத்தலான நடனமாடும் திறனையும் படத்தில் சாதகமாகப் பயன்படுத்தி இயக்குநர் திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறார். வெஸ்டர்ன் டான்ஸராக சாய் பல்லவியைத் திரைப்படங்களில் பார்த்து வந்த ரசிகர்களுக்கு அவரைக் கிளாசிக்கல் டான்ஸராக பார்ப்பது புதுமையாக இருந்திருக்கும்.

கதைக் களம்:படத்தின் முதல் பகுதியில், கல்லூரி மாணவரின் தோற்றத்தில் இருக்கும் (வாசு) நானி எப்படியாவது திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருப்பார். தன் கதையை ஒருவழியாக ஒரு குறும்படத் தயாரிப்பாளரிடத்தில் கொடுத்து அதைக் கடும் முயற்சிகளுக்குப் பின் திரைப்படமாக இயக்கி நல்ல வெற்றியைப் பெறுவார்.

இதற்கு அடுத்தபடியாக இத்திரைக் கதையை இந்தியில் இயக்க ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்கையில், அத்திரைப்படத்தின் கதை, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் பதிப்பகத்தில் பதிக்கப்பட்ட ஒரு நாவலின் கதை என்று பதிப்பகம் வாசு மீது வழக்குத் தொடுக்கிறது.

குறிப்பாக அந்த பதிப்பகத்தில் அச்சிடப்பட்டதாகக் கூறப்படும் நாவலின் ஆசிரியர் தான் "ஷியாம் சிங்கா ராய்".

இதன் தொடர்ச்சியாக, வாசு ஒரு மனோதத்துவ நிபுணரிடத்தில் தன் கதையில் வருவனவற்றையும், அதே நேரத்தில் அந்த நாவலில் உள்ளவற்றையும் எடுத்து நினைவு கூரும் வகையில் திரைப்படத்தின் மீதியுள்ள பாகம் விரிகிறது.

சாதி ஒழிப்பு:ஊரிலேயே நல்ல செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த ஷியாம் சிங்கா ராய், சமூகத்தில் விடாப்பிடியாகத் தொற்றிக் கொண்டுள்ள சாதியப் பாகுபாடுகளை, அப்பகுதியில் நடக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சினமுற்று சீர்திருத்தங்களைச் செய்ய எண்ணும் இளைஞராகத் தோற்றமளிக்கிறார். தோற்றத்தில் மட்டுமில்லை அதை அவரது துணிகரமான செயல்பாட்டிலும் காட்டுகிறார்.

அதிலும், "தண்ணிக் கீழேதான் இருக்கு. தரையும் கீழேதான் இருக்கு? எந்த நீர்த்துளி மேல எந்த சாதின்னு எழுதியிருக்கு..? அவனும் இதே ஊர்ல தான் பொறந்தான்.

இதே ஊர்ல தான் வளர்ந்தான். இதே ஊர்ல தான் மண்ணாவான். அந்த மண்ணுல விளைஞ்சதை தின்னுதான் உன் பிள்ளைகளும் வளருவாங்க.." மற்றும் "சுயநலத்தைப் போல ஒரு சித்தாந்தம் இல்லை.., மனிதனை மதிக்காத இடம் நாடாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் எனக்குத் தேவையில்லை.." போன்ற வசனங்கள் பார்வையாளர்களை ஈர்க்க வைக்கின்றன.

காதல்

இந்தப் படத்தில் நவராத்திரி விழாவிற்கு, தேவதாசியாக வந்து ரோஸி (நடிகை சாய்பல்லவியின் கதாபாத்திரம்) ஆடும் நடனத்தில் ஷியாம் தன்னை மறந்து காதல் மையம் கொள்வதை மிக அழகான முறையில் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதிலும் நவராத்திரி விழாவில் நடைபெறும் அந்தப் பாடல் காட்சிகளில் அவர் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன.

இருவருக்கும் இடையே காதல் நாளுக்கு நாள் பனியில் உலரும் நிலவொளியில், வனத்தில் மலரும் மலர்களாகப் பார்வையாளர்களின் மனதில் மணம் வீசிச் செல்கிறது.

இதன் தொடர்ச்சியாக, திரைப்படத்தில் வரும் கிளைமேக்ஸ் காட்சியில் ஷியாம் ரோஸியை சந்திக்கும் அந்தவேளையில் ரசிகர்களைக் கண்கலங்க வைக்கிறது.

பாகுபலி திரைப்படத்தில், குந்தள தேசத்தில் நடிகர் பிரபாஸ், நிலவொளியில் தன் மனம் கவர்ந்த நாயகியான அனுஷ்காவை எண்ணி, மரத்தின் மீது படுத்துக்கொண்டு தொலையாத தூக்கத்தைத் தேடிக் கொண்டிருப்பார். ஒருபாடலில், பிரமாண்டமான கப்பலில் இரவில் பயணம் செய்வார்கள்.

இந்த இடத்தில் இரண்டு திரைப்படங்களிலும் உள்ள இரவுநேரம், நிலவொளி, ஓடும் தண்ணீருக்கு மத்தியில் படகில் பயணம் போன்ற உருவகக் காட்சிகள் ஒருசேர அமைந்திருக்கும். அதிலும், குறிப்பாக இந்தத் திரைப்படத்தில் ஷியாம், ரோஸி ஆகியோரின் காதல் காட்சிகள் பார்வையாளர்களை எழுந்து செல்லாமல் மீண்டும் மீண்டும் காணத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

தேவதாசி முறை ஒழிப்பு

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞனான ஷியாமிற்கு, ஏன் பெண்கள் கண்ணிற்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்பவர்களாக இருக்கவேண்டும் என்னும் கேள்வி எழுகிறது. பெண்கள் இங்கு யாருக்கும் அடிமையில்லை என்று ஓங்கி ஒலிக்கிறது திரைப்படத்தின் காட்சிகள்.

இதன்தொடர்ச்சியாக, கோயில்களுக்குள்ளே தேவதாசிகளாக இருக்கும் பெண்களுக்கு விடுதலையை அளிக்கிறான், ஷியாம் சிங்கா ராய்.

பெண்ணியம்

தன் அன்றாட வாழ்வில் நடப்பனவற்றை, குறிப்பெழுதும் வழக்கம் கொண்ட ஷியாம் என்னும் கதாபாத்திரம் பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு; அவர்களுக்கும் எல்லாவிதமான ஆசைகள், விருப்பங்கள், கனவுகள் உண்டு என்பதையும்; சமூகத்தில் பெண்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதினையும் அழுத்தமாகப் பதிவு செய்ய முயல்கிறது.

அண்மையில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா, பெண்கள் மீது சீண்டல்கள் செய்பவனின் விரல்களை வெட்டிவிடுவார். பின் இதற்காக, அவர்மீது அரண்மனையில் விசாரணை மேற்கொள்ளப்படும்போது, நடிகர் பிரபாஸ் வந்து பெண்கள் மீது கை வைத்தவனை வெட்டவேண்டியது, விரல்களையல்ல.. தலையை.! என்று தன் வாளால் தலையைக் கொய்துவிடும் காட்சி வரும்.

அதைப்போலவே, நடிகை சாய்பல்லவி மீது கை வைத்து அத்துமீறல்களில் ஈடுபட்டவனை, நடிகர் நானி அடித்து உதைத்து தேவி காளியம்மனின் கையிலுள்ள அரிவாளால் வெட்டிவிடுவார். இதற்காக, அவருக்கு எதிர்ப்பு வரும். அதையும் தாண்டி, இதை வென்று காட்டுவார், நடிகர் நானி ஷியாம் சிங்காராய் என்னும் கதாபாத்திரமாக உருமாறி..!

இந்த இரு படங்களிலும், வரும் இக்காட்சிகள் வன்முறையைத் தூண்டுவதாகப் பார்க்கப்படுவதில்லை. மாறாகப் பெண்கள் மீது தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபடுவோருக்குத் தரப்படும் தகுந்த பாடமாகவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

புரட்சிகரமான பத்திரிகையாளர்

ஷியாம் சிங்கா ராய் கதாபாத்திரத்தில் புரட்சிகரமான பத்திரிகையாளராகச் சாதிய ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, பெண்ணியம் ஆதரிப்பு என ஏகப்பட்ட பல்வேறு கூறுகளை நேர்த்தியாக நடிக்கும் திறனை அற்புதமாகக் காட்டியுள்ளார், நடிகர் நானி.

நடிகர் நானி நடித்த 'ஷியாம் சிங்கா ராய்' கதாபாத்திரம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்கிறார்.

இதையும் படிங்க:'I lost my body' - (கை)விடப்பட்டக் கதை

Last Updated : Jan 30, 2022, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details