"எனக்கு மட்டும்தான் அவ ஸ்லோ மோஷன்ல தெரியுறாளா மச்சான்?" என காதலியை பள்ளியில் தொலைத்துவிட்டு மீண்டும் கல்லூரியில் கண்டடைந்த வருணின் வரிகள்தான் இவை. இதைத்தொடர்ந்து வருணுக்கும் நித்யாவுக்குமான உறவு சிக்கல்களை, இருவரும் ஒன்றாக இருந்த தருணங்களை கூறும் கதைதான் ’நீதானே என் பொன்வசந்தம்’.
ஒரு ஆண் - பெண் இடையே இருக்கும் காதலுக்கும், ஈகோவுக்குமான மெல்லிய கோட்டினை உணர்வுப்பூர்வமாக இந்தத் திரைப்படம் சித்தரித்திருந்தது. படத்தில் உள்ள ஒரு காட்சியேனும் படத்தை பார்க்கும் ரசிகனை தன் பள்ளி காதலையோ, கல்லூரி காதலையோ நினைக்க வைத்தது.
வழக்கமாக விறுவிறுப்பான கமர்ஷியல் கதைக்களத்தையே ரசித்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதுபோன்ற மெதுவாக செல்லும் காதல் கதைகள் சற்று சலிப்பைதான் ஏற்படுத்தும். இந்தத் திரைப்படத்தின் திரைமொழி மெதுவாக நகர்ந்தாலும் ரசிகர்களுக்கு இப்படம் காதல், சுயநலம், ஈகோ, குடும்ப சுழல் என மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண குடும்பத்து பையனின் உணர்வுகளை கடத்திச்சென்றது.
இதற்கு முன்பாக கௌதம் மேனன் இயக்கிய 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற திரைப்படங்கள் காதலிக்காத ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தது. இந்தத் திரைப்படம் காதலிப்பவர்களின் மனதில், ஈகோவால் காதலை இழந்தவர்களின் மனதில் இடம் பிடித்தது.
இந்தத் திரைப்படத்திற்கு இளையராஜா மிகப்பெரிய தூண். கௌதம் படத்திற்கு இளையராஜா இசையா? என்று பலருக்கு கேள்வி எழுந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பாடல் மூலம் ரசிகர்களிடம் புதிய இளையராஜா அறிமுகம் ஆனார். இளையராஜாவுக்கென்றே ட்ரிப்யூட்டாக இப்படத்தை செதுக்கினார் கௌதம் மேனன். படத்தின் அனைத்து பாடல்களும் இன்றைய ரசிகர்களின் டாப் ஃபேவரைட்டாகவே இருந்துவருகிறது. ஒவ்வொரு பாடலிலும் வருணுக்கும் நித்யாவுக்குமான உரையாடலை காட்சிபடுத்தியிருந்தார் கௌதம். இது ரசிகனுக்குள் தேங்கியிருந்த காதலை வெளிக்கொண்டு வந்தது
ஒரு காதல் நாவலை படிப்பதிலிருந்து கிடைக்கும் உற்சாகத்தை காட்சியின் பிம்பமாக பிரதிபலித்தது நீதானே என் பொன்வசந்தம். ஒவ்வொரு ஆணுக்கும் தன் கனவு காதலி இருந்திருப்பாள், ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கனவு காதலன் இருந்திருப்பான். நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட கனவு காதலரை சந்திப்பதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே இருக்கும். ஒருவேளை அப்படிபட்ட கனவு பாத்திரத்தை நாம் சந்தித்தால்? அந்த சந்திப்பு காதலாக மாறினால்? அப்படிப்பட்ட காதல்தான் வருணுக்கும் நித்யாவுக்குமானது. இருவரின் வெவ்வேறு வயதின் காலகட்டத்திலும் நடக்கும் உணர்வு பரிமாற்றம், உறவுச் சிக்கல், குடும்பப் பின்னணி, சூழல் என சாதி, மதம் கடந்த உளவியல் சிக்கல்கள் படத்தில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும்.