தமிழ் சினிமாவில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படங்களில் ‘புதுப்பேட்டை’ படத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. புதுப்பேட்டை படத்துக்கு முன், புதுப்பேட்டை படத்துக்கு பின் என கேங்ஸ்டர் திரைப்படங்களை வரையறுக்கலாம் என சில சினிமா விமர்சகர்கள் சொல்வதுண்டு.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சிநேகா, சோனியா அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்த இத்திரைப்படம், 2006ஆம் ஆண்டு மே 26 அன்று வெளியானது. ‘புதுப்பேட்டை’ வெளியான சமயம் சரியான அங்கீகாரத்தைப் பெறவில்லை.
இதற்கு முந்தைய செல்வராகவன் படம்போல் இத்திரைப்படம் இல்லை, கேங்ஸ்டர் படக்கதையை ஜவ்வாக இழுத்திருக்கிறார் என எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. எனினும் படம் வணிக ரீதியாக தோல்வியை சந்திக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை பார்த்தவர்கள் இதனை பெரிதும் கொண்டாடத் தொடங்கினார்கள்.
அதன்பிறகு மீண்டும் இந்தப் படத்தை பார்த்துவிட்டு பெரிய அளவில் விமர்சனம் எழுதிய சினிமா விமர்சகர்களும் உள்ளார்கள். தனுஷ் திரையுலக பயணத்தில் இது மாபெரும் திருப்புமுனையாக அமைந்த படம். செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக என்ஜிகே கடந்தாண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றத்திருந்தது.