இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் 'ஆக்கப் பிறந்தவளே' என்ற பாடலை வெளியிட்டார். நாம் இந்த உலகிற்கு வருவதற்கு காரணமான பெண்ணினத்தைப் பாராட்டும் நோக்கோடு இப்பாடலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கூறுகையில், "உலகம் பெண்களால் இயக்கப்படுவதைக் காண விரும்புகிறேன். இன்று நான் இந்த அளவில் இருப்பது, பெண்களால் வந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தப் பாடல் பெண்களுக்கு இன்னும் அவர்களுக்குரிய மேலான இடத்தை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும்.
'ஆக்கப் பிறந்தவளே' பாடலை எனது மகள் லீலாவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்தப் பாடலின் உருவாக்கத்தில் அவள் தான், எனக்கு ஒரு உந்துசக்தியாக இருந்தாள். என் மகள் லீலாவுக்கு நன்றி . கடந்த 7ஆம் தேதி வெளியான இப்பாடல் தற்போது அனைத்து ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்கக்கூடிய வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
ஷான் ரோல்டன் அவரது ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு சுயாதீனப் பாடலை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.