மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனா இயக்கியுள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வானம் கொட்டட்டும். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து நடிகர் சரத்குமார் கூறுகையில், "சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் என்று பன்முக வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். வானம் கொட்டட்டும் படத்தின் கதையை என்னிடமும் ராதிகாவிடமும் படக்குழுவினர் கூறினார்கள். கதையைக் கேட்டதுமே இருவருக்கும் பிடித்துவிட்டது. மண் மணம் மாறாத ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள், வெற்றி, தோல்விகள் ஆகியவற்றை எப்படிச் சந்திக்கின்றார்கள் என்பதே படத்தின் கதை. நாங்கள் ஒருவருக்கு ஒருவர் என்றுமே போட்டியாக நினைத்ததில்லை.