கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்களை நடிகர் சோனு சூட் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார். இதுதவிர பலருக்கு மருத்துவ உதவி, ஏழை குடும்பத்துக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது என்று பல சேவைகளைப் புரிந்துள்ளார்.
அதுமட்டுமில்லாது மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், காவலர்களுக்கு முகக்கவசங்கள், வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டுவந்தது என தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தையும் செய்துள்ளார்.
இந்நிலையில் சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையைப் பாராட்டி, ஐ.நா. மேம்பாட்டுத் திட்டத்தின் சிறப்பு மனிதநேய செயலுக்கான விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் தள்ளிவைக்கப்பட்ட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சோனு சூட்டும் தான் நடிக்க ஒப்பக்கொண்ட படங்களின் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஜிம்மில் சோனுசூட்டை சந்தித்த சரத்குமார், அவர் செய்த உதவிகளுக்கு மனதாரப் பாராட்டியுள்ளார். இது குறித்து சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "காலை 5.30 மணிக்கு ஜிம்முக்குச் செல்வதற்கு ஈடாகா எதுவும் இல்லை. நீண்ட நள்களுக்குப் பின் எனது அருமை நண்பர் சோனுசூட்டை சந்தித்தேன்.
கோவிட் நெருக்கடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் செய்த உதவிகளையும் அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்டினேன். வாழ்த்துகள் நண்பரே" என சோனுசூட்டிற்கு டேக் செய்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும்விதமாக சோனுசூட், "தமிழ் சினிமாவில் என் நண்பர் விஜயகாந்துடன் நடிகனாக நான் ஆரம்பித்த பயணம் எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. அவரும் நீங்களும் நடித்திருந்த 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தை எனக்குப் போட்டுக்காட்டி வில்லன் கதாபாத்திற்கு விஜயகாந்த் மேற்கோள்காட்டினார். இறைவனின் ஆசி உங்களுக்குக் கிடைக்கட்டும். காலை 5.30 மணிக்கு உங்களை ஜிம்மில் சந்திக்கிறேன்" எனர் பதிவிட்டார்.