இயக்குநர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் பெயரில் தொடர்ச்சியாக தரமான படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வகையில் 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'ஜோசப்' திரைப்படத்தை தமிழ் ரீ-மேக்காக தயாரித்துள்ளார்.
தமிழில் 'விசித்திரன்' என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் ஆர்.கே. சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். நடுத்தர வயதுள்ள நபராக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
வில்லன் நாயகனாக நடிப்பது துயரம்
இவ்விழாவில் இயக்குநர்கள் பாலா, சீனு ராமசாமி, 'விசித்திரன்' படத்தின் இயக்குநர் பத்மகுமார், தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தலைவர் முரளி ராமசாமி, ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி, ஜி.வி.பிரகாஷ்குமார், முன்னாள் டிஜிபி ஜாங்கிட், தனஞ்செயன், ஶ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விசித்திரன் திரைப்படம் இசை வெளியீட்டு விழா விழாவில் பேசிய சீனு ராமசாமி, "இயக்குநர் பாலா ஒரு அண்ணனாக இருந்து ஆர்.கே. சுரேஷை வழி நடத்திவருகிறார். வில்லன்களை நாயகனாக நடிக்க வைப்பது துயரமான காரியம். எத்தனை ஓடிடி தளங்கள் வந்தாலும் திரையரங்குகள் அழியாது" என்றார்.
அவரை அடுத்து, நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார், "பாலாவின் தயாரிப்பில் இது எனது மூன்றாவது படம். ஆர்.கே. சுரேஷ் தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது. அனைவரும் பாடல்களைக் கேட்டு விட்டுச் சொல்லுங்கள்" எனப் பேசினார்.
'மரியாதையை காப்பாற்றிக்கொள்ளவும்'
இதன்பின், தயாரிப்பாளரும், இயக்குநருமான பாலா பேசுகையில், "ஆரம்பத்தில் இப்படத்தில் எனது பெயரை போடவேண்டாம் என்றேன். படத்தை பார்த்தபிறகு போட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டேன். சுரேஷ் இப்போதுதான் உருப்படியான ஒரு படம் நடித்துள்ளார். இனிமேல் சுரேஷ் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்படத்தில் மரியாதை கிடைக்கும். அதனை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்" என்றார்.
விசித்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்வின் இறுதியில் பேசிய ஆர்.கே. சுரேஷ், "மலையாளத்தில் ஜோசப் படத்தை பார்த்துவிட்டு எனக்கு தூக்கமே வரவில்லை. இப்படத்தை எப்படியாவது தமிழில் எடுக்க வேண்டும் என நினைத்தேன். பாலாவிடமும் சொன்னேன். நல்ல படம். ஆனால் நீ நிறைய மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். இதற்காக 30 கிலோ வரை எடையைக் குறைத்தேன். மலையாளத்தில் மிகப்பெரிய இயக்குநராக இருக்கும் பத்மகுமார் இப்படத்தை இயக்கியது எனக்குப் பெருமை" என்றார்.
இதையும் படிங்க: மூன்றாம் பிறை 40 ஆண்டுகள் - இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் நன்றி!