பழம்பெரும் பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் மகனாகவும், இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையாகவும் அனைவராலும் அறியப்படும் நடிகர் ரிஷி கபூர், தன் மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஆக திரை உலகில் அடி எடுத்து வைத்தார்.
ஹீரோவாகும் முன்னரே தேசிய விருது
தொடர்ந்து தன் பதின்ம வயதில் 1970ஆம் ஆண்டு இளம் வயது ராஜ் கபூராக அவர் நடித்த ’மேரா நாம் ஜோக்கர்’ படத்திற்காக தேசிய விருதையும் வென்றார்.
க்ளாசிக் காதல் கதை ’பாபி’
அதனையடுத்து தன் 21ஆம் வயதில் பாலிவுட்டின் மாபெரும் ஹிட் படங்களில் ஒன்றான ’பாபி’படத்தின் மூலம் டிம்பிள் கபாடியாவுடன் ஹீரோவாக திரையுலகில் தன் பயணத்தைத் தொடங்கினார். டீனேஜ் காதல் படங்களுக்கு பாலிவுட் திரையுலகில் ட்ரெண்ட் செட்டராக விளங்கிய இப்படம், அன்றைய சோவியத் யூனியனில் சக்கைபோடு போட்டது.
ரிஷி கபூர்-டிம்பிள் கபாடியா ஜோடி ஏகோபித்த ரசிகர்களால் அன்றைய காலத்தில் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. ‘ஹம் தும் ஏக் கம்ரே மே...’, ’மே ஷாயர் தோ நஹி...’ என இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை இன்றளவும் எங்கு கேட்டாலும் குழந்தைத் தன்மை நீங்காமல் காதல் ததும்ப பாடும் ரிஷி கபூரின் முகமே முதலில் நியாபகத்துக்கு வரும்.
ஸ்வெட்டர் நாயகன்
லவ்வர் பாயாக இன்றளவும் கொண்டாடப்படும் ரிஷி கபூர், ஸ்வெட்டர் அணியாமல் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு முன்னால், குளிர் பிரதேசங்களில் ஸ்வட்டர், மஃப்ளர் அணிந்து டூயட் பாடி ட்ரெண்ட் செட் செய்த பெருமை ரிஷி கபூரையே சேரும். ஸ்வெட்டர்களை பராமரிப்பது குறித்து தன் ரசிகர்களுக்க்கு ரிஷி கபூர் ட்விட்டரில் வகுப்பெடுத்த சுவாரஸ்ய சம்பவங்களும் உண்டு.
திருமணம்
தன் மனைவி நீது சிங்குடன் ஜஹீர்லா இன்ஸான், கபி கபி, தூஸ்ரா ஆத்மி ஆகிய படங்களில் நடித்த ரிஷி கபூர் அவரை 1980ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ரன்பீர் கபூர், ரித்திமா கபீர் ஷாஹ்னி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.