மறைந்த எஸ்பிபியின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. எஸ்பிபியின் உடலுக்கு பொதுமக்கள், திரையுலகினர் திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்பிபியின் மாயக்குரலுக்கு தென்னிந்தியா மட்டுமல்ல பாலிவுட்டும் அடிமைதான். 16 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மக்களின் மனதாக ஒலித்த எஸ்பிபிக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், அரசியல் தலைவர்களும் எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்
பாடும் நிலா மறைவு - இந்திய இசை அதன் குரல்களில் ஒன்றை இழந்துவிட்டது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு
காலத்தை வென்ற இசை மேதையின் துயரம் தரும் மறைவால் அதிர்ச்சி அடைந்தேன். கனவிலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை இசையுலகில் அவர் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார். இருவரும் நெல்லூரை சேர்ந்தவர்கள் என்ற முறையில் இது எனக்கு தனிப்பட்ட முறையிலும் பெரும் துயரத்தை அளிக்கும் சம்பவம்.
அவரது மெல்லிசைக்குரல், மொழிகள், இலக்கியம் மீதான காதல், பழகுவதற்கு இனிய குணம் ஆகியவை நான் உள்ளிட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் மீது நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " எஸ்பிபியின் திடீர் மறைவால் நமது கலையுலகம் வலுவிழந்துவிட்டது. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் ஒலித்த பெயர் எஸ்பிபி. தனது மெல்லிசைக் குரலால் பல ஆண்டுகளாக ரசிகர்களை வசீகரித்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.