தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#67YearsOfParasakthi - பகுத்தறிவு பேசிய 'பராசக்தி'

சிவாஜி கணேசன் எனும் மகாநடிகனை தமிழ் சினிமாவுக்குத் தந்த புரட்சிகர திரைப்படம் 'பராசக்தி' வெளியாகி, இன்றோடு 67 ஆண்டுகள் நிறைவடைகிறது.

Parasakthi

By

Published : Oct 17, 2019, 1:42 PM IST

1952ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் என்ற புதுமுக நடிகனை முன்னணி கதாபாத்திரமாக வைத்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படம் வெளியானது. கருணாநிதி தன் வசனம், திரைக்கதை யுக்தியைப் பயன்படுத்தி இந்தக் கதையை எப்படி தமிழ் சினிமாவின் திருப்புமுனையான படமாக மாற்றினார் என்பது இன்றளவும் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் நிகழ்வு.

திரைப்படத்தின் முன்கதையைக் கூறும் காட்சி

திரைப்படம் தொடங்கி அரைமணி நேரம் போயிருக்கும், கதாநாயகனின் குடும்பம் சிதைந்து அவன் தங்கை வறுமையின் பிடியில் சிக்கியிருப்பாள். அதுவரை நடந்த கதையைச் சம்பந்தம் இல்லாத இரண்டு கதாபாத்திரங்கள் திரையில் தோன்றி சொல்லிவிட்டுப் போவார்கள். 'நல்லா வாழ்ந்த குடும்பம் இப்படி ஆகியிருச்சு' என அவ்வளவு நேரம் நடந்த கதையை சொல்லிவிட்டு கடந்து செல்வார்கள். படத்துக்கு தாமதமாக வருபவர்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம், கதை கேட்டு நச்சரிப்பதை தவிர்க்க இப்படி ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

பெண்ணியம் பேசிய பராசக்தி:

'பராசக்தி' படத்தில் வரும் துணிச்சலான பெண் கதாபாத்திரங்கள் போல் இன்று வரை தமிழ் சினிமாவில் வேறு கதாபாத்திரங்கள் அமைக்கப்படவில்லை என்றே கூறலாம். பெண்களை போகப் பொருளாக காட்டிவரும் சூழலில், கதாநாயகியை பகுத்தறிவுவாதியாக காட்டியிருப்பார்கள். 'பிராணநாதா, அன்பே ஆருயிரே' என்பதைத் தாண்டி கதாநாயகனை கதாநாயகி அழைக்காத காலகட்டமது, 'பராசக்தி'யில் கதாநாயகனைப் பார்த்து கதாநாயகி, 'நீ ஒரு முட்டாள்' என அழுத்தமாக சொல்லி, அதற்கான காரணங்களை விளக்குவார். சமூகத்தால் தானும் தன் தங்கையும் வஞ்சிக்கப்பட்டதாக எண்ணிக்கொண்டு வெறுப்பில் அலையும் கதாநாயகனை பார்த்து, 'நீ ஒரு சுயநலவாதி, உன் தங்கைக்காக மட்டும் யோசிக்கிறாய். உன் தங்கை போல் எத்தனை பெண்கள் வாழ்க்கையைத் தொலைத்து அலைகிறார்கள். அவர்களைப் பற்றி என்றாவது சிந்தித்திருக்கிறாயா' என கேள்வி எழுப்புவார். இது சம உரிமையை, பொதுநலம் குறித்த சிந்தனையை ரசிகர்களிடம் தூண்டியது.

கதாநாயகனுக்கு அறிவுரை கூறும் கதாநாயகி

'சமூகப் புரட்சி என்பது ஆலகால விருட்சத்தின் கிளைகளை வெட்டுவது அல்ல, அதன் வேர்களை பெயர்த்தெடுப்பது' என புரட்சிகர கருத்துகளை கதாநாயகனிடம் பேசுவார். சரி, கதாநாயகி கதாபாத்திரம்தான் இப்படி என்றால், கதாநாயகனின் தங்கை கல்யாணியை தன் இச்சைக்கு பயன்படுத்த நினைக்கும் வில்லன் கதாபாத்திரத்தின் மனைவி அசால்ட்டாக பெண்ணுரிமை பேசி கடந்து செல்வார்.

கதாநாயகன் தங்கையிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிக்கும் வில்லன் தன் மனைவியிடம் சிக்கிக்கொள்கிறான். அப்போது அவர் வழக்கமான தமிழ் சினிமா போல், 'நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன், ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்யத் துணிந்தீர்கள்' என கண்ணீர் வடிக்காமல், 'நீயெல்லாம் மனுசன்னு பிறந்துருக்க பாரு' என்பார். அதற்கு வில்லன், 'என் இஷ்டம் நான் அப்படித்தான் செய்வேன்' என்று சொல்லவும், 'நானும் என் இஷ்டம்னு வேற ஆம்பள கையப்பிடிச்சுட்டு போகவா'னு கேட்பார். நீளும் இந்த உரையாடலில், 'ஏம்மா கல்யாணி கதவைப் பூட்டிக்க, கண்ட நாயெல்லாம் உள்ள வரப் பார்க்கும்' என தன் கணவனை சாடுவது போல் அந்தக் கதாபாத்திரம் பேசும். இது ஆண்மையை விஞ்சும் பெண்மையின் நியாயத்தின் அடையாளம்.

அதிகாரவர்க்கத்துக்கு எதிரான குரல்:

காவலர் பேசும் காட்சி

ரோட்டோரமாய் படுத்துக் கிடக்கும் கதாநாயகனை காவலர் ஒருவர் எழுப்பி, 'நீ பிக்பாக்கெட்தானே என்பார். இல்ல எம்ப்டி பாக்கெட்' என கதாநாயகன் பதில் சொல்ல, அந்த உரையாடல் இவ்வாறு நீளும்

காவலர்: 'இங்க ஏன்டா வந்து படுத்த...'

கதாநாயகன்: 'மாடு செய்த புண்ணியம் கூட இந்த மனுசன் செய்யலையா? மதராஸ்ல மனுசன் மிருகமாதான் இருக்கான்'

காவலர்: 'என்னடா சொன்ன?'

கதாநாயகன்: 'உங்களை சொல்லல, முதுகெலும்பு உடைய மூட்டை வண்டி இழுக்கிறானே, குதிரைக்குப் பதிலாக நரம்பு தெறிக்கத் தெறிக்க ரிக்‌ஷா வண்டியிழுத்து கூனிப் போயிருக்கிறானே, நாயைப் போல சுருண்டு நடைபாதையில் குடும்பத்தோடு தூங்குகிறானே அந்த நல்லவன், நாதியற்றவனை, நாலு கால் பிராணியாக்கப்பட்ட அந்த மனிதனைச் சொன்னேன். சென்னை புனிதமான நகரம், இங்கே மனிதன் மிருகம் என்பார்'

காவலர்: ’நீ சென்னைக்கு மேயரா வந்து மிருகத்தலாம் மனுசனா மாத்து..'

இவ்வாறு நீளும் அந்த வசனம். பின்னர், இப்படத்துக்கு வசனம் எழுதிய கலைஞர் முதலமைச்சர் ஆனார். மனிதனை சக மனிதனே இழுக்கும் 'கை' ரிக்‌ஷாவை ஒழித்தார் என்பது வரலாறு.

மூடநம்பிக்கைகளை தகர்த்த பராசக்தி:

'டேய் பூசாரி, யாரது அம்பாளா? அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்?','கோயிலில் குழப்பம் விளைவித்தேன், கோயில் வேண்டாம் என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதற்காக உள்ளிட்ட வசனங்களால் 'பராசக்தி' மூடநம்பிக்கைக்கு எதிரான சக்தியாக மாறியது.

’அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்?’

யாசகம் பெறுபவர்கள் முதல் அத்தனை அடித்தட்டு மக்களுக்காவும் பராசக்தி நீதி பேசியிருப்பாள். மாநில அரசாங்கமே தடைசெய்ய வேண்டும் என்று கூறிய 'பராசக்தி' திரைப்படம் 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாகியது. அதிகார வர்க்கங்களின் கைகளில் காலம் காலமாக சிக்கிக் கிடந்த தமிழ் சினிமா, எளிய மக்களிடம் சேர இந்தத் திரைப்படம் திருப்புமுனையாக இருந்தது. 'பராசக்திக்கு முன், பராசக்திக்குப் பின்' என்றுதான் தமிழ் சினிமாவை பிரித்துப் பார்க்க முடியும்.

பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் 'பராசக்தி' குறித்து, 'PK என்று அமீர்கான் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியானது. மதங்களில் இருக்கும் மூடநம்பிக்கைகளை சாடி எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தை வட இந்திய ஊடகங்கள் எல்லாம் ஆஹா, ஓஹோ எனப் பாராட்டினார்கள். ஆனால், அது தமிழ்நாட்டில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அதற்கு பல ஆண்டுகள் முன்பே 'பராசக்தி' அந்தக் கருத்துகளை இன்னும் தீவிரமாக நமக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறது' என ஒரு விழா மேடையில் பேசியிருப்பார்.

'கோயில் கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது'

'பராசக்தி' படத்தைப் பார்த்து அதிகார வர்க்க கும்பலும், மூடநம்பிக்கை ஆசாமிகளும் இன்றும் நடுங்குகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ’பராசக்தி' புறக்கணிக்கப்பட்டது. சிவாஜி எனும் மகாநடிகனை தமிழ் சினிமாவுக்கு தந்த புரட்சிகர திரைப்படம் ’பராசக்தி' வெளியாகி இன்றோடு 67 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதையும் படிங்க: அலங்கார் தியேட்டரில் விசில் பறக்கும்: தலைவன் நினைவுநாள்

ABOUT THE AUTHOR

...view details