தமிழ்நாட்டில் உள்ள முக்கிய விஐபி-களின் பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபட்டுவந்தனர். அத்தகைய சமயங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் பெண் காவலர்கள் பலரும் இன்னல்களுக்கு உள்ளாகிவந்தனர்.
அதன் காரணமாக தற்போது விஐபி-களின் பாதுகாப்புப் பணியிலிருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவல் துறைத் தலைவர் திரிபாதி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவுக்கு நன்றி தெரிவித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “2019ஆம் ஆண்டு ‘மிக மிக அவசரம்’ என்றொரு திரைப்படத்தைக் காண நேரிட்டது. தனியறை இருளில் படம் பல கேள்விகளையும் சங்கடங்களையும் மனத்திற்குள் ஏற்படுத்திக் கொண்டே ஓடியது.
பெண் காவலர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான, மன ரீதியான சிக்கல்களை முகத்தில் அறைந்தாற்போல் பேசியிருந்தது படம். குறிப்பாக விஜபி-களின் காவல் பணியில் கால்கடுக்க நிற்கும் பெண் காவலர்களின் அவசரத் தேவைகளை உணர்த்தும் காட்சிகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருந்தது.
சிறு முதலீட்டில் பெரும் வலியை சொன்ன அந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் பல நாள்களாக நடந்துவருவதை அறிந்தோம். உடனே அப்படத்தை வாங்கி விநியோகிக்க வேண்டும் என்று தீர்க்கமாக உறுதிபூண்டோம்.
அதன்படியே அடுத்த சில மாதங்களில், அத்திரைப்படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் எங்களின் லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக விநியோகித்து வெளியிட்டோம்.
அதனைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் உள்ளிட்ட விஜபி-களின் பாதுகாப்புப் பணிகளிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவல் துறைத் தலைவர் திரிபாதி ஆகியோரின் உத்தரவைத் தொடர்ந்து தற்போது நடைமுறைக்கும் வந்திருப்பது, மனத்தில் குடிகொண்டிருந்த அத்தனை ஆற்றாமைகளையும் ஒருசேர அடித்துச் சென்றுவிட்டது.
இந்நேரத்தில் இப்படியொரு கதையை எழுதிய ஜெகன்நாத்தையும், திரைக்கதை எழுதி இயக்கிய இயக்குநர் சுரேஷ் காமாட்சியையும் மனதார வாழ்த்துகிறேன். இப்படத்தை விநியோகித்ததற்கு லிப்ரா புரொடக்ஷன் என்றென்றைக்கும் பெருமைகொள்ளும்.