கன்னடத் திரையுலகில் 'கிரிக் பார்ட்டி' படத்தின் மூலமாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. பின்னர் 'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் 'சரிலேரு நீக்கேவரு' படத்தில் நடித்திருந்தார்.
தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் இந்திய பன்மொழி திரைப்படமாக உருவாகி வரும் 'புஷ்பா' நடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'சுல்தான்' படத்திலும் நடித்து வருகிறார்.
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் ராஷ்மிகா சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களிடையே உரையாடிவருகிறார். இந்நிலையில் தேசிய ஊரடங்கு குறித்து தனது சமூகவலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியூட்டும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "என்னுடைய 18ஆவது வயதில் இருந்து என் வாழ்க்கை ஒரு மாரத்தான் போல இருக்கிறது. முடியும் இடம் வந்துவிட்டது என்று நான் நினைக்கும் போதெல்லாம் பந்தயம் மீண்டும் தொடங்கிவிடும். இதை நான் புகாராக சொல்லவில்லை. இதைதான் நான் எப்போதும் விரும்பினேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் என் வாழ்க்கையில் இவ்வளவு நாள் நான் வீட்டில் இருந்ததில்லை.
என்னுடைய பள்ளியிலிருந்து உயர்கல்வி வரை ஹாஸ்டலில் இருந்தேன். என் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள் என அடிக்கடி நினைத்தேன். ஆனால் என் டீன் ஏஜ்ஜில் நான் ஒரு போராளி போல இருந்தேன். இரவு நேர படப்பிடிப்பின் போது செட்டில் என் அம்மாவும் என்னோடு இருப்பார். குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் அளவுக்கு அப்பாவிடம் வசதி இருந்தது. என்னுடைய குட்டி தங்கை தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை சமாளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.
இந்த ஊரடங்கின் போது 2 மாதங்களுக்கும் மேலாக வீட்டில் இருக்கிறேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் நாங்கள் வேலையை பற்றி பேசுவதில்லை. அவர்கள் முழுக்க முழுக்க என் மீது அக்கறை கொண்டுள்ளார்கள். எல்லாவற்றையும் சமாளிக்கும் வலிமையை எனக்கு அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இது தான் என்னுடைய மகிழ்ச்சியான இடம்.
இந்த அமைதியையும் மகிழ்ச்சியையும் நான் உணர்வேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் நம்புங்கள் குடும்பம் தான் நம் வீடு. வேலையிலிருந்து நீண்ட நாள்களுக்கு பிறகு நீங்கள் மீண்டும் திரும்பி வந்து அமைதியை உணர்ந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எக்ஸ்பிரஷன்களின் இளவரசி ராஷ்மிகாவின் க்யூட் புகைப்படங்கள்