சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்தியத் திரையுலகின் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதை அறிவித்தார்.
மத்திய அரசின் பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ள ரஜினிக்கு இது மற்றுமோர் கௌரவம்.
1975ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரஜினி. தனது விடாமுயற்சியால் திரையுலகில் மிகப் பெரிய இடத்துக்கு உயர்ந்திருக்கிறார். வெள்ளை நிறத்தில் இருப்பதுதான் ஹீரோ மெட்டீரியலுக்கான தகுதி என்ற பிம்பத்தை உடைத்துக்காட்டியவர் ரஜினி.
இந்தப் பையன் பெரிய ஆளா வருவான் பாருனு எஸ்பிபி-யிடம் ரஜினியைக் காட்டி சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர். அவர் சொன்னது போலவே ரஜினியும் அசைக்க முடியாத ஆலமரமாக வளர்ந்து நின்றார். தற்போது தனது குருநாதர் பாலசந்தர் பெற்ற உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் வென்றிருக்கிறார்.
’பைரவி’ படத்துக்கு முன் குணச்சித்திர வேடம், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரஜினிக்கு அதன்பிறகு கதாநாயக வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கின. மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் ரஜினிக்குள் இருந்த நடிகனை மக்களுக்கு அடையாளம் காட்டியது. ’முள்ளும் மலரும்’ படத்தைப் பார்த்துவிட்டு உன்னை அறிமுகப்படுத்துனதுக்கு பெருமைப்படுறேன் என பாலசந்தர் கூறியிருக்கிறார்.
கருப்பு வெள்ளை, கலர், 3 டி, மோஷன் கேப்சர் என நான்கு விதமான திரைப்பட வடிவங்களிலும் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமை ரஜினியையே சேரும். அடித்தட்டு மக்களின் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து, எளிய மக்களின் நாயகனாக மாறிப்போனார் ரஜினிகாந்த்.
ரஜினி நடித்தால் படம் சூப்பர் ஹிட் என்ற நிலை வந்தது. தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி ஓடத்தொடங்கினர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினியின் பெரும்பான்மையான படங்கள் சூப்பர் ஹிட்.