சென்னை: தமிழ்ப் புத்தாண்டில் ரஜினி கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கவுள்ளாராம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன், வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் ரஜினி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.
இவரது கருத்து வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ரஜினிக்கு நெருக்கமானவரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் இதற்கு மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக தொலைபேசியில் அவர் கூறியதாவது:
ரஜினி கட்சி தொடங்க இருப்பது பற்றி நான் சொன்னதாக தவறான தகவல் கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் ஏப்ரலில் கட்சி தொடங்குவார் என்று நான் சொல்லவில்லை. செப்டம்பர் மாதம் மாநில அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்திக்கவுள்ளார். எதிர்காலத்தில் அவர் தமிழகத்தின் முதலமைச்சராவார் என்றார்.
இந்த தகவல்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்த ரஜினி, கட்சி தொடங்குவது பற்றியும், அதன் பெயர் உள்ளிட்டவை பற்றியும் எதுவும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், அதுபற்றி பல்வேறு விதமான கருத்துகள் வெளியான வண்ணம் இருந்தன.