தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ரசிகர்கள் என் மீது வைக்கும் நம்பிக்கை வீண் போகாது' - ரஜினிகாந்த் - தர்பார் இசை வெளியீட்டு விழா

சென்னை: ரசிகர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது என்று, தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

rajinikanth speech on Darbar Audio Release
rajinikanth speech on Darbar Audio Release

By

Published : Dec 9, 2019, 1:16 PM IST

லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்போது, நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை நினைவுக்கூர்ந்து பேசினார். தான் பட்ட அவமானத்தை வெகுமானமாக எடுத்துக்கொண்டு எப்படி வெற்றி பெற்றார் என்பது குறித்தும் மனம் திறந்தார்.

பின்னர் இயக்குநர் முருகதாஸ் பற்றி கூறுகையில்,

"ரமணா படம் மூலம் இயக்குநர் முருகதாசை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அடுத்து கஜினி படமும் பிடித்தது. அப்போதே அவருடன் இணைந்து ஒரு படம் நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் முடியவில்லை. அதன்பிறகு வயதாகிவிட்டது. டூயட் வேண்டாம் என்று எனது வயதுக்கு ஏற்றாற்போல் கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து 'காலா', 'கபாலி' போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது கார்த்திக் சுப்புராஜ் ஒரு கதை சொன்னார். அந்தக் கதையில் டூயட் எல்லாம் இருந்தது. நான் நடிக்க மறுத்தேன். அப்போது தொண்ணூறுகளில் நீங்கள் எப்படி இருந்தீர்களோ அதேபோன்று உங்களை காட்டுகிறோம் என்று வெள்ளை தாடியை கருப்பு தாடி ஆக்கி பேட்டையில் நடிக்க வைத்தார். இதைப்பார்த்த ஏ.ஆர். முருகதாஸ் இப்படி நீங்கள் நடிப்பீர்கள் என்றால் நாம் எப்போதோ இணைந்து படம் பண்ணி இருக்கலாம் என்று என்னிடம் ஒரு கதையைக் கூறினார். அந்த கதைதான் 'தர்பார்'. முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது . 'தர்பார்' படத்தில் ஜனரஞ்சகமாக திரைக்கதை எழுதியுள்ளார் முருகதாஸ். நான் இதுவரை 160க்கும் மேலான படங்களில் நடித்துள்ளேன் அதில் 'தர்பார்' பொழுதுபோக்கு நிறைந்த திரில்லர் படமாக தயாராகியுள்ளது.

நயன்தாரா பற்றி கூறுகையில்:

'சந்திரமுகி' திரைப்படத்தில் நடிக்கும்போது நயன்தாராவிற்கு இரண்டாவது படம். அப்போது எப்படி இருந்தாரோ அதை விட இப்போது கிளாமராக சுறுசுறுப்பாக உள்ளார், என்றார்.

ரஜினி பகிர்ந்த முக்கியமாக இரண்டு விஷயங்கள்:

தொடர்ந்து பேசிய அவர், "எங்கள் குடும்பத்தில் யாரும் பெரிய அளவில் படிக்கவில்லை. அதனால் எனது அண்ணன் என்னை படிக்கச் சொல்லி வற்புறுத்தினார். பணக்காரப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் என்னை சேர்த்தார். நான் படிப்பில் விருப்பமில்லாமல் மாணவர்களோடு ஊர் சுற்றுவது, படம் பார்ப்பது என்று இருந்தேன். பள்ளியில் தேர்வு வந்தபோது தேர்வு 160 ரூபாயை அண்ணன் கடன் வாங்கி கொடுத்தார். எனக்கு தெரியும் நான் தேர்வு எழுதினால் தேர்ச்சி பெறமாட்டேன் என்று. அதனால் அந்தப் பணத்தை பள்ளியில் கட்டவில்லை. அன்று இரவே ரயில் பிடித்து தமிழ்நாட்டிற்கு வந்தேன். சென்னையில் இறங்கியபோது பயணச்சீட்டை தொலைத்துவிட்டேன். பரிசோதகர் என்னிடம் டிக்கெட் கேட்டபோது, தொலைந்துவிட்டது என்று கூறினேன்.

ஆனால், அவர் என்னை சந்தேகப்பட்டு ஓரமாக நிறுத்திவைத்து விசாரணை மேற்கொண்டார். என்னை அவர் நம்பவில்லை. அதனால் நான் டிக்கெட்டும் வாங்கவேண்டும் என்று கூறினார். அபராதமும் கட்டவேண்டும் என்று கூறினார். அதற்கு நான் பொய் கூறவில்லை என்று வாதிட்டேன். அவ்வழியாக சென்ற கூலித்தொழிலாளி ஒருவர் எனக்காகப் பணம் கொடுக்க முயன்றார். அப்போது அவரை நான் தடுத்து நிறுத்தி என்னிடம் பணம் உள்ளது. ஆனால் நான் டிக்கெட் வாங்கி தான் ரயிலில் பயணம் செய்தேன் என்று கூறினேன். என்னிடமுள்ள பணத்தை பார்த்த பரிசோதகர் என்னை சென்னையில் இறங்க அனுமதித்தார். நான் நம்பிக்கையோடு தமிழ்நாட்டிற்கு வந்தேன். இன்று உங்கள் முன்பு ரஜினியாக நிற்கிறேன் என்றார்.

இதையும் படிங்க:'ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து சாப்பிட்டவர் ரஜினி' - இயக்குநர் ஷங்கர்

16 வயதினிலே:

'16 வயதினிலே' படத்தில் நான் நடித்த பரட்டை கதாபாத்திரம்தான் என்னை தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் கொண்டு சேர்த்தது. '16 வயதினிலே' படத்திற்கு பிறகு ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அப்போது எனக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் பேசப்பட்டது. அவர்கள் முன் பணமாகவே கொடுப்பதாக கூறினார்கள். அதனால் அவர்களிடம் நான் முன்பணம் கேட்டேன். அப்போது அந்த படத்தின் மேனேஜர் நாளை காலை மேக்கப் போடும் பொழுது கொடுக்கிறேன் என்று கூறினார். நானும் மறுநாள் காலை மேக்கப் போடுவதற்கு முன்பு அவரிடம் பணம் கேட்டேன். அவர் மேக்கப் போடுங்க தருகிறேன் என்றார். நான் அதற்கு மறுத்து விட்டேன். அந்த நேரத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு அம்பாசிடர் காரில் வந்து என் முன் நிறுத்தி நீ எல்லாம் ஒரு ஆளா நாலு படத்தில் நடிப்பதற்குள் இவ்வளவு திமிரா உனக்கு படத்தில் வாய்ப்பில்லை என்று கூறி வெளியேற்றினார்.

அப்போது கையில் காசில்லை ஏ வி எம் ஸ்டுடியோவில் இருந்து நடந்தே சென்றேன். அப்போது என் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றியது. இதே கோடம்பாக்கத்தில் வெளிநாட்டு கார் வாங்கி கால் மேல் கால் போட்டுக்கொண்டு இதே தயாரிப்பாளர் முன்பு நிறுத்தவேண்டும் என்று எண்ணினேன். அது இரண்டு வருடங்களில் நடந்தது. அதேபோல் ரஜினி என்ற பெயர் நல்ல பெயர். அதை ஒரு சிறந்த நடிகருக்கு சூட்டவேண்டும் என்று ஒரு இயக்குநர் காத்திருந்தார். அந்த ரஜினி என்ற பெயரை எனக்கு சூட்டினார். அவருடைய நம்பிக்கையை நான் இப்போது காப்பாற்றிவிட்டேன் என்று நம்புகிறேன். அதேபோன்று கலைஞானம் என் மீது நம்பிக்கை வைத்து வீட்டை விற்று என்னை கதாநாயகனாக வைத்து படம் எடுத்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அவர் வைத்த நம்பிக்கையும் பொய்யாகவில்லை. என் மீது வைத்த நம்பிக்கை எல்லாம் நிஜம் ஆகின. அதனால் ரசிகர்கள் என் மீது வைத்த நம்பிக்கை என்றும் வீண் போகாது" என்று ரஜினி தெரிவித்தார்.

"டிசம்பர் 12ஆம் தேதி எனக்கு பிறந்தநாள். இந்தப் பிறந்த நாள் மிக முக்கியமான பிறந்தநாள். என்னுடைய எழுபது வயதில் காலடி எடுத்து வைக்கிறேன். அந்நாளில் நான் ஊரில் இருக்கமாட்டேன். அதனால் என் பிறந்தநாளில் ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவுங்கள் " என்று கூறி தனது உரையை முடித்தார் நடிகர் ரஜினிகாந்த்.


இதையும் படிங்க: 'எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி' - லதா மங்கேஷ்கர்

ABOUT THE AUTHOR

...view details