இயக்குநர் பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா. அதன் பின் பாரதிராஜா இயக்கிய 'நிறம் மாறாத பூக்கள்', 'கிழக்குச் சீமையிலே', 'பசும்பொன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்திருக்கிறார். தற்போது குணச்சித்தர வேடத்திலும் அம்மா வேடங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது ராதிகா சின்னத்திரை தொடர்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களின் படத்தில் நடித்தாலும் மறைந்த இயக்குநர் கே. பாலசந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இது குறித்து ரசிகர் ஒருவர் ராதிகாவின் ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு, "கே.பாலசந்தர் தவிர இந்திய சினிமாவின் அனைத்து சிறந்த இயக்குநர்களுடனும் நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். நீங்கள் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர், ஆனாலும் இந்த வெற்றிடத்தை நான் உணர்கிறேன். பாலச்சந்தர் என்னும் ஆளுமை எந்த கதாபாத்திரத்திற்காகவாவது உங்களை அணுகினாரா அல்லது அப்படி நடக்கவில்லையா? அவர் பற்றி ஒரு சில வார்தைகள்" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ராதிகா, "நாங்கள் சில முறை ஆலோசித்துள்ளோம். ஆனால் அவர் என்னிடமிருந்து அற்புதமான ஒன்றை எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை என்பதுதான் சோகம். எனக்கு அது மிகப்பெரிய வருத்தத்தை தந்தது" என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: சரத்குமாருடன் சேர்ந்து நடிக்க நினைத்ததில்லை - ராதிகா