சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசும் போது நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில்ராதாரவிகருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள்.
விழாவில் ராதாரவி பேசியதாவது,
எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா ஒரு நல்ல நடிகை அவ்வளவுதான், அவரைப் பற்றி வெளிவராத செய்தியே இல்லை. அவையெல்லாம் தாண்டி வெற்றிகரமாக நிற்கிறார் என்றால் அது பெரிய விஷயம்.
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள். நடிகை நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போதெல்லாம் சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
முன்பெல்லாம் சாமி வேஷத்தில் நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத் தான் தேடுவார்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம். தொடர்ந்து பேய் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. உண்மையில் நிஜ பேய் கொண்டு வந்து நயன்தாரா முன் நிறுத்தினால் அவரைப் பார்த்து பேயே பயந்து ஓடி விடும்.
படத்தில் சம்பளம் வாங்கி நடித்தவர்கள் யாரும் இந்த விழாவிற்கு வரவில்லை. நாங்கள் வந்து என்ன பேசப்போகிறோம். ஒரு படத்தில் நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் போது இரண்டு அக்ரிமென்ட் களை போட வேண்டும். ஒன்று கண்டிப்பாக படத்தின் புரமோஷனுக்கு வரவேண்டும். மற்றொன்று கதாநாயகன் இயக்குநர்கள் நடிகைகளை தொட்டு நடிக்கலாம் என்றும் அக்ரிமெண்ட் போட வேண்டும். என்று அவர் கூறினார்.
நயன்தாராவின் பட விழாவில் கலந்து கொண்டு அவரையே ராதாரவி தரக்குறைவாக பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.