சுயமரியாதையின் சுடரொளியாக விளங்கிய நடிகவேள்எம்.ஆர்.ராதாவின் மகன் மட்டுமின்றி, அவர் பெயரிலும் பாதியை தன் பெயரோடு கொண்டிருக்கும் ராதாரவிதான் தற்போது நடிகைகள் குறித்த தனது விசாலப் பார்வையை வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
நாடி நரம்பெல்லாம் ஆணாதிக்க வெறி ஊறிய ஒரு முழு ஆணாதிக்கவாதிகூட பெண் நடிகைகள் குறித்து இவ்வளவு வன்மமான கருத்தை வெளியிட்டிருப்பாரா என்பது கேள்விக்குறியே.
குறிப்பாக, “பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றும் நடிகைகள்” என்ற ராதாரவியின் இந்த ஒப்பீடு, “கண்ணாடி சார் அது...” என்கிற வடிவேலுவின் பிரபல நகைச்சுவை வசனத்தை நினைவுப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில், இங்கு பார்த்தவுடன் கூப்பிடுபவர்களை பற்றி ராதாரவி பேசியிருந்தால்தான் ஆச்சர்யமே தவிர, இது போன்ற பேச்சுகள் ஒன்றும் அவருக்கு புதிதல்ல.
திமுக தன் பின்னால் இருக்கும் தைரியத்தில், சில தலைவர்களை விமர்சித்துப் பேசுகிறேன் என, மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இழிவான கருத்துகளை வெளிப்படுத்தி, பின்னர் கனிமொழியிடம் குட்டு வாங்கியதெல்லாம் ராதாரவிக்கு எப்படி மறக்கிறது என்பதுதான் இங்கு வியப்பான விஷயமாகும்.
அதேபோல், ‘மீ டூ’ விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, தன் டப்பிங் சங்கத் தலைவர் அதிகாரத்தை பயன்படுத்து சின்மயி மீது இவர் எடுத்த நடவடிக்கை, நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்படி செல்லும் இடமெல்லாம் சிறப்பாக வைத்து செய்யப்படும் நிலையில் இருந்துகொண்டு, நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசி தற்போது மீண்டும் மண்டியிட்டுள்ளார் ராதாரவி. அதிலும் தற்போது புதிய டிசைனில் மண்டியிட்டுள்ளார். அதாவது, இவரது கருத்தும், பேச்சும் தவறானது இல்லையாம். அது புரிந்துகொள்ளப்பட்ட விதம்தான் தவறானதாம். இப்படி ஒரு அரிய விளக்கத்தை கொடுப்பதன் மூலம் இவர் யாரை முட்டாளாக்க எத்தனிக்கிறார் என்பதே இங்கு பலரின் கேள்வியாக இருக்கிறது.
இதற்கிடையே, நயன்தாராவின் நண்பர் விக்னேஷ் சிவனின் வேண்டுகோளை ஏற்று, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ராதாரவியை தற்காலிகமாக நீக்கம் செய்வதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி வெளியான அதே சமயத்தில், “என்னால் திமுகவிற்கு பாதிப்பு என்றால், நானே விலகிக் கொள்கிறேன்” என கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை உணராமல் தனது பெருந்தன்மையை காட்டியிருக்கிறார் ராதாரவி.
இது ஒரு புறம் இருக்க, அவரின் தங்கை ராதிகா, சரத்குமாரின் மகள் வரலட்சுமி போன்ற சொந்த குடும்பப் பெண்களே நயன்தாரா குறித்த கீழ்த்தரமான பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இவர் போன்றவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்பதைவிட, இவர் போன்று இன்னும் திரையுலகில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க விஷம் நிறைந்த நச்சுப் பாம்புகளை முறையாக அடையாளம் கண்டறிந்து தவிர்த்துவிடுவதே தமிழ் சினிமாவிற்கு நலம்.