தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மண்ணுக்கும் மனிதனுக்குமான இணைப்பைச் சொல்கிறது விவசாயம்: மகரிஷி பேசும் அரசியல்! - விவசாயிகள் தற்கொலை

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வெளியாகியுள்ள ‘மகரிஷி’ திரைப்படம் முக்கியமான அரசியலை பேசுகிறது.

Maharshi

By

Published : Jun 7, 2019, 2:37 PM IST

அரசியலில் நீங்கள் தலையிடாவிட்டால், அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும் - லெனின்

லெனின்

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் மகேஷ் பாபு, பூஜா ஹெக்டே, அல்லரி நரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மகரிஷி’. இந்தத் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. இதுபற்றி விமர்சனங்கள் பல வெளியாகி, படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கதைச் சுருக்கம்

மகரிஷி படத்தில் மகேஷ் பாபு

உலகமே திரும்பிப் பார்க்கும் பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடும் இளைஞன் ரிஷி (மகேஷ் பாபு). அவனது கல்லூரி வாழ்க்கையில் ஒரு பிரச்னையை சந்திக்கிறான். அதிலிருந்து அவனைக் காப்பாற்றுகிறான் அவனது நெருங்கிய நண்பன் ரவி சங்கர் (அல்லரி நரேஷ்). ஆனால் ரவி சங்கர்தான் தன் லட்சியப் பயணத்துக்கு உதவியது என்ற உண்மை தெரியாமல் இருக்கிறான் ரிஷி. நினைத்தது போல அவன் வாழ்க்கை மாறுகிறது, அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக (CEO) பணிபுரிகிறான். இந்தச் சூழலில், ரவி சங்கர் வாழ்க்கை தன்னால் தடம் மாறியது ரிஷிக்குத் தெரியவருகிறது. நண்பனை சந்தித்து தன்னோடு அழைத்துவர முடிவு செய்கிறான் ரிஷி. ஆனால் தன் கிராமத்தை கார்ப்பரேட்டிடமிருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கியிருக்கும் ரவி, ரிஷியுடன் வர மறுக்கிறான். அதனால் நண்பனுக்கு உதவ களத்தில் இறங்குகிறான் ரிஷி, கார்ப்பரேட்டுகளிடம் இருந்து நண்பனின் கிராமத்தை மீட்டானா இல்லையா என்பதுதான் கதை. இந்தக் கதை விவசாயத்தின் அவசியத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறது.

உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை நம்மைச் சுற்றியிருக்கும் அத்தனையிலும் அரசியல் இருக்கிறது. கார்ப்பரேட் சுரண்டல் குறித்தும், விவசாயத்தின் அவசியம் குறித்தும் தெளிவான பார்வையை வைக்கிறது ‘மகரிஷி’ திரைப்படம். 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி ஒரு நாளைக்கு 45 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயிகள் தற்கொலையின் விழுக்காடு அதன்பிறகு குறைந்திருந்தாலும், அவர்களின் அவலநிலை மாறவில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் விவசாயிகள் தற்கொலைகளில் பெரும்பான்மை வகிக்கின்றன.

விவசாயிகள் தற்கொலைக்கான முக்கியக் காரணங்கள்

விவசாயி தற்கொலை

1. விவசாயம் செய்வதற்கான பொருட்களின் விலையேற்றம். அதாவது உரங்கள், விதைகள், விவசாயத்துக்கு பயன்படும் கருவிகள் (டிராக்டர், பம்ப்புகள்) உள்ளிட்டவையின் விலை அதிகரிப்பு.

2. விவசாயத்துக்கு பெற்ற கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். கடனை செலுத்தாத விவசாயிகளை வங்கி நிர்வாகம் அடியாட்களை வைத்து மிரட்டும் சம்பவங்கள் சில இடங்களில் நடந்தேறியிருக்கிறது.

3. விளைவித்த பொருளுக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியாத அவலநிலை.

4. விழிப்புணர்வு இல்லாமல் இருத்தல், நீர்ப்பற்றாக்குறையான இடத்தில் கரும்பு விவசாயம் மேற்கொள்வதை உதாரணமாக சொல்லலாம். இதுபோன்று பல காரணங்கள், விவசாயிகளை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டுகின்றன.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் போராட்டம் எண்ணிலடங்கா. தமிழ்நாடு விவசாயிகள் டெல்லிக்கு சென்று சிறுநீர் குடிக்கும் போராட்டம், நிர்வாணப் போராட்டம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் எந்த பயனுமில்லை. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் நாசிக் முதல் மும்பை வரை 180 கிலோ மீட்டர்கள் நடந்துசென்று போராட்டம் செய்தனர். விவசாயிகளின் அவலநிலை இப்படியாக தொடர்கிறது.

ஏன் விவசாயிகளின் போராட்டங்கள் தோல்வியைத் தழுவிகின்றன?

விவசாயிகளின் போராட்டங்கள் தோல்வி அடைவதற்கு முக்கியக் காரணமாக அரசியல் பார்வையாளர்கள் ஒன்றை கூறுகின்றனர். அது மக்களிடம் போராட்டம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, விவசாயிகள் பிரச்னைகளுக்கு விவசாயிகள் மட்டுமே போராடுகின்றனர். மீனவர்கள் பிரச்னைக்கு மீனவர்கள் மட்டுமே போராடுகின்றனர். பொதுமக்கள் இதை தங்கள் பிரச்னையாக பார்ப்பதில்லை, விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டால் பாதிக்கப்போவது நாமும்தான் என அவர்கள் உணர வேண்டும். விவசாயிகள் போராட்டத்துக்கு தங்கள் பெருவாரியான ஆதரவை வழங்க வேண்டும். ‘மகரிஷி’ திரைப்படம் முக்கியத்துவம் பெறக் காரணம், அது முன்வைக்கும் சில விஷயங்கள்தான்.

அமெரிக்காவில் வேலை செய்த உங்களுக்கும் விவசாயத்துக்கும் என்ன சம்பந்தம் என கதாநாயகனிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்புகிறார். சோற்றைத் தின்னும் அத்தனை பேருக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தம் உள்ளது என கதாநாயகன் பதிலளிக்கிறார். அதுமட்டுமல்லாது சில முக்கியமான யோசனைகளையும் வழங்குகிறார்.

மகரிஷி படத்தில் மகேஷ் பாபு

#weekendAgriculture, வார இறுதியில் விவசாயம் என்பதை பள்ளி, கல்லூரிகள் கட்டாயமாக்கச் சொல்லுகிறார். அப்போதுதான் அனைவரும் விவசாயத்தின் அவசியத்தை உணருவார்கள், விவசாயத்தின் செய்முறைகளை கற்றுக்கொள்வார்கள் என்கிறார்.

மண்ணுக்கும் மனிதனுக்குமான இணைப்பைச் சொல்கிறது விவசாயம், அதை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறதை மையக் கருவாக வைக்கிறது ‘மகரிஷி’. விவசாயிகளை பரிதாபமாகக் காட்டி படத்தை நகர்த்தாதது மிகவும் சிறப்பு. இந்தப் பொது சமூகத்தை நோக்கி கதாநாயகன் கூறும் இந்த வரிகள் மிக முக்கியமானது, விவசாயிகளுக்கு தேவை உங்கள் கருணையல்ல, அவர்களுக்கான மரியாதை.

இயற்கை வளத்தை சுரண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு அடிபணியாமல், இயற்கைவள செயற்பாட்டாளர்களுக்கும், மக்களுக்காக போராடும் நபர்களுக்கும் நாம் ஆதரவாக செயல்பட்டால்தான் அடுத்துவரும் தலைமுறை நிம்மதியான வாழ்வை வாழ முடியும் என்பதை ‘மகரிஷி’ அழுத்தமாகபதிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details