சென்னை: அண்மையில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடியில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக ஒரு தரப்பினர் படத்திற்கும், நடிகர் சூர்யாவிற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை நீக்க வேண்டும் எனவும் கூறியிருந்த நிலையில், அந்த காட்சி பின்னர் மாற்றியமைக்கப்பட்டது. அந்த சர்ச்சை தொடர்பாக நடிகர் சூர்யாவும், இயக்குநரும் தங்களின் கருத்துக்களை அறிக்கையின் மூலம் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஜெய்பீம் பட சர்ச்சை வேகமாக சமூக வலைதளத்தில் பரவத்தொடங்கியது. குறிப்பாக நடிகர் சூர்யா மீது தனிப்பட்ட விமர்சனங்களும், தாக்குதல்களையும் குறிப்பிட்ட தரப்பினர் முன் வைக்க தொடங்கினர். மேலும் நடிகர் சூர்யாவை அச்சுறுத்தும் வகையிலும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யா வசித்து வரும் இல்லத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், நடிகர் சூர்யாவிற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஆயுதப்படை காவலர்கள் ஐந்து பேர் சூர்யாவின் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
நேற்றிரவு முதல் ஒரு தலைமை காவலர் உள்பட ஐந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சிமுறையில் 24 மணிநேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சுறுத்தல் தொடர்பாக சூர்யா தரப்பில் இருந்து பாதுகாப்பு கேட்டு எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையிலும், உளவுத்துறை தகவலின்படி காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:'சூர்யாவின் படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம்' - பாமக வெங்கடேசன்