சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படம் இனி மானுட சமூகத்தின் பிரதியாக மாறியுள்ளதாக, அந்தப் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அந்தப் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டரில், "பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி, அது மானுட சமூகத்தின் பிரதி. யாவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட் பதிவுடன் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், நடிகர் கதிர், நடிகை ஆனந்தி, ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா ஆகியோரின் பெயர்களையும் டேக் செய்துள்ளார்.
2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஒடுக்குமுறை, பாகுபாடு ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக அமைந்திருந்தது. கதிர், 'கயல்' ஆனந்தி, யோகி பாபு, 'பூ' ராம் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து, பல விருதுகளையும் வாரிக் குவித்தது.