சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் நீட் தேர்வு எழுதிய கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
இன்று காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தினால் நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கு நாமும் நமது உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம். தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு நீட் தேர்விலிருந்து விலக்கம் பெறுவதற்கான வழிகளை கண்டடைந்து, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும். நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நீட் மரணம் - மேலும் ஒரு மாணவி தற்கொலை