திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் எனப்படும் அகாதமி விருது வழங்கும் விழா வருகிற 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்புகள் உச்சத்தைத் தொட்டுள்ளன.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான விருந்தினர்களை வரவேற்கும் ரெட் கார்ப்பெட் எனும் சிவப்புக் கம்பள வரவேற்பிற்கான ஆயத்தங்கள் முழுவீச்சில் இன்று தொடங்கியது. அத்துடன், வண்ண விளக்குகள் அலங்காரம், வரவேற்புத் திரை அலங்கரிப்பு வேலைகள் என முக்கியப் பணிகளை பணியாளர்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மேற்கொண்டனர்.
ஹாலிவுட்டின் முக்கிய சினிமா அரங்குகளில் ஒன்றான டால்பி திரையரங்கில் நடைபெறவுள்ள இந்த விழாவில், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் தவிர, டாம் ஹேங்க்ஸ், க்ரிஸ் ராக், டைக்கா வெய்டிட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கி, விழா மேடையை அலங்கரிக்கவுள்ளனர்.