டொரான்டோ திரைப்பட விழாவை ஆக்கிரமிக்கும் தமிழ்ப் படங்கள் - சர்வதேச ஃபிலிம் ஃபெஸ்டிவல்
சென்னை: கார்த்திக்கின் 'கைதி' படத்தைத் தொடர்ந்து, அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' திரைப்படமும் டொரான்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'ஓ மை கடவுளே'. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருந்தார்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் பலரும் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்து நடிகர் மகேஷ் பாபு, தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் படம் வெளியாகும் முன்பே, இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் கைப்பற்றியது. அப்படத்தையும் அஷ்வத் மாரிமுத்து இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, இப்படம் "இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் டொரான்டோ"வில் திரையிடப்பட உள்ளது. இந்த அறிவிப்பால் மொத்த படக்குழுவினரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'முதல் படம். முதல் சர்வதேச அங்கீகாரம். மிகவும் மகிழ்ச்சி. நடிகர், நடிகைகள் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ரசிகர்களுக்கு நன்றி' என ட்வீட் செய்திருந்தார்.
இந்தத் திருவிழா ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக தமிழிலிருந்து கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படம் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.