கோவாவில் 50ஆவது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
தமிழில் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு', லட்சுமி ராமகிருஷ்ணனனின் 'ஹவுஸ் ஓனர்' ஆகிய திரைப்படங்களைத் திரையிட்டனர். அதேபோல், மலையாளத்தில், 'உயரே', 'ஜல்லிக்கட்டு', 'கோலாம்பி', உள்ளிட்ட திரைப்படங்களும் இந்தியில் 'உரி', 'கல்லிபாய்', 'சூப்பர் 30' உள்ளிட்ட திரைப்படங்களும் திரையிடப்படட்டன.
மேலும் இந்த விழாவில் 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' என்ற விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. நேற்று இந்த விழா நிறைவுற்றது. நிறைவு விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு சிறப்பு சாதனையாளர் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
இதனையடுத்து நேற்று நிறைவு விழாவில் நடிகை நித்யா மேனன் கலந்துகொண்டார். அப்போது அவர் பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில் சினிமா அனுபவம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஆரம்பத்தில் எனக்கு சினிமா மீது அதிக விருப்பம் இல்லை. காட்டு விலங்குகளை புகைப்படம் எடுப்பதுதான் எனது ஆசையாக இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் நடிகை ஆகிவிட்டேன்.
காதல் திருமணத்தில் கணவன் மனைவியிடம் உடனடியாக அந்நோன்யம் வந்துவிடும். ஆனால் பெற்றோர்களால் நிச்சியிக்கப்பட்ட திருமணத்தில் நாட்கள் செல்ல செல்லதான் காதல் வரும். அது போலதான் எனக்கு சினிமா மீது காதல் ஏற்பட்டு தற்போது சினிமா மீது முழு காதல் வந்துள்ளது .
இயக்குநர்கள் என்னை அதிகமாக வேலை வாங்கத் தேவையில்லை. ஒரு சீனை படித்துக் காட்டினால் அதை நான் புரிந்துக்கொண்டு நடித்துவிடுவேன். அந்த அளவுக்கு நான் இப்போது தேறிவிட்டதாக அதில் தெரிவித்தார்.