அமராவதி (மகாராஷ்டிரா): தமிழில் 2010இல் வெளியான அம்பா சமுத்திரம் அம்பானி என்ற படத்தில் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானவர் நவ்னீத் கவுர் ராணா.
கதையின் நாயகன் கருணாஸின் காதல் நாயகியாக படத்தில் நடித்திருப்பார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பல்வேறு மொழி படங்களில் தோன்றிய நவ்னீத் கவுருக்கு அரசியல் ஆசை துளிர்க்க ஆரம்பித்தது. தொடர்ந்து அரசியலில் குதித்த நவ்னீத் கவுர், 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். மிக இளவயது எம்பியாக வலம்வந்து கொண்டிருக்கும் கவுரின் வாழ்க்கையில் தற்போது புயல் வீசத் தொடங்கியுள்ளது.
நவ்னீத் கவுரிடம் மோச்சி என்ற பட்டியலின சமூக சாதி சான்றிதழ் உள்ளது. இந்தச் சான்றிதழ் போலியாக பெறப்பட்டது என்ற குற்றஞ்சாட்டு தொடர்ச்சியாக எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதிகள் ஆர்டி தனுக்கா மற்றும் வி.ஜி. பிஸ்த், நடிகை கவுரின் சாதி சான்றிதழை ரத்து செய்தனர்.
மேலும் அவர் ஆறு வார காலத்துக்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இது பற்றி பேசிய கவுர், தாம் நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகவும், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாகவும், தனக்கு நீதி கிடைக்கும் என்றும் நம்புவதாகவும் அசால்ட் காட்டுகிறார்.
சர்ச்சைக்குள்ளான அம்பாசமுத்திரம் அம்பானி! அத்துடன் தாம் கடந்த 10 ஆண்டுகளாக சிவசேனாவுக்கு எதிராக போராடிவருவதையும் நினைவுக் கூர்கிறார். நவ்னீத் கவுரின் கணவர் எம்எல்ஏ ராணா ஆவார். இவர்கள் 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று அமராவதியில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின்னர்தான் நவ்னீத் கவுர் மோர்சி சமூகத்தை சேர்ந்தவர் என்று பரவலாக வெளிப்படுத்தப்பட்டது. அப்போதே நவ்னீத் கவுருக்கு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவரின் சாதி குறித்தும் சந்தேகம் எழுப்பின. அவர் மீது வழக்கும் தொடரப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.