திரையிசை கலைஞர்கள் கட்டடத்தை தன் சொந்த செலவில் கட்டிக் கொடுப்பதாக இளையராஜா ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுகுறித்த திரையிசை சங்க உறுப்பினர்கள் கலந்தாலோசனை செய்யும் சிறப்புக் கூட்டம் இன்று நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் சேர்மன் கல்யாணசுந்தரம், செயலாளர் சங்கரன், தலைவர் தீனா, எஸ். ஏ. ராஜ் குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இளையராஜா புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக பேசப்பட்டது. அப்போது, தற்போதுள்ள கட்டடத்தின் பின்புறம் உள்ள ஆடிட்டோரியத்தை மட்டும் நவீனமான முறையில் இளையராஜா கட்டித் தர இருப்பதாக கூறப்பட்டது.
சங்க உறுப்பினர்கள் விவாதம் இதற்கு இளையராஜா முழு கட்டடத்தையும் கட்டித் தருவதாகதான் கூறியிருந்தார். இதற்கான கட்டட வரைபடத்தை பத்திரிக்கையாளர்களுக்கும் சங்கத்திற்கும் கொடுத்தார். தற்போது கட்டடத்தின் ஒரு பகுதி மட்டும் மறுசீரமைக்கப்படும் என்று இளையராஜா கூறியுள்ளார்.
இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று ஒரு சில உறுப்பினர்கள் இக்கூட்டத்தை புறக்கணித்ததோடு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கல்யாணசுந்தரம் பேசுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மான் இந்தக் கட்டடத்தை ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலம் கட்டிக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார்.
அதற்காக சங்கத்தின் வரவு செலவு கணக்கை கேட்டிருந்தார். மொத்த கணக்குகளையும் கொடுத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது இளையராஜா சங்கத்திற்கு உதவுவது வரவேற்கத்தக்க ஒன்று. அதனை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதோடு வரவேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.