இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனின் மகள் தீ (22). இவர் தமிழில் 'இறுதிச்சுற்று' படத்தில் 'ஏ சண்டக்காரா', 'மாரி 2' படத்தில் 'ரெளடி பேபி', 'சூரரைப் போற்று' படத்தில் 'காட்டுப் பயலே', 'ஜகமே தந்திரம்' படத்தில் 'ரகிட ரகிட' என பல பாடல்களை பாடியுள்ளார். இவர் சமீபத்தில் ஆதி தமிழர்கள், இயற்கை வளம் குறித்து 'எஞ்சாயி எஞ்சாமி' என்னும் சுயாதீன பாடல் ஒன்றை 'தெருக்குரல்' அறிவுடன் சேர்ந்து பாடினார். இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.
'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி - சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி
சென்னை: தனது மகள் தீ பாடிய சுயாதீன பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் நெகிழ்ச்சி அடைந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சுயாதீன கலைஞர்களை கண்டறிந்து ஊக்குவிக்க ஏ.ஆர். ரஹ்மான் 'மாஜா' என்ற தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த 'மாஜா' தயாரிப்பில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. கலர் ஃபுல்லாக எடுக்கப்பட்ட இப்பாடலானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பாடலின் வெற்றிக்கு சந்தோஷ் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் மீது மிகுந்த அன்பு செலுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி. எங்களது ஒட்டுமொத்த குழுவும் உங்களுடைய ஆதரவுக்கு உணர்வுப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இப்பாடல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்று ஆதரவு, அங்கீகாரம் பெற வேண்டிய குரல்களையும் கலைஞர்களையும் அடையாளம் காணும் முயற்சிகளை தொடருவோம். நாங்கள் செய்யும் அனைத்தும் மக்களாகிய உங்களுக்கானதே" என்று குறிப்பிட்டிருந்தார்.