நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் திரைக்கு வரவிருக்கும் படம் தர்பார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நடிகை நயன்தாரா, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பிராமையா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள தலைவர் தீம், சும்மா கிழி, தனி வழி உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஒரு புதிய தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
அண்ணாமலை திரைப்படத்தில் இசைப்பதிவு செய்யப்பட்டு வெளியாகமல் போன ஒரு டிராக் இசையை தர்பார் படத்தில் படக்குழு இசையமைத்துள்ளது. ரஜினியின் ஓபனிங் தீம் இசையை வடிவமைத்த இசையமைப்பாளர் தேவா, தர்பார் படத்திலும் அனிருத் உடன் கைகோர்த்திருக்கிறார்.