தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கேரளாவில் டாப் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும், மோகன்லாலின் திரைப் பயணம் அவ்வளவு சுலபமனது கிடையாது. பல சர்ச்சைகளை கடந்து திரைத்துறையில் இன்றும் நிலைத்து நிற்கிறார்.
இவர் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில், 300க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகராக விளங்கும் இவரின் நடிப்பில் 2019ஆம் ஆண்டில் வெளியான லூசிபர் திரைப்படம், அதுவரை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்களை அடித்து நொறுக்கி அதிக லாபம் ஈட்டிய படமாக சாதனை படைத்தது. மலையாளத்தில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படங்களில் முதல் பத்து படங்களில் ஆறு படங்கள் மோகன்லாலின் படங்களே.
இந்திய சினிமாவிலேயே தனித்து நின்று கதைகளுக்காக திரைப்படங்களை உருவாக்கும் மலையாள சினிமாவின் டாப் ஸ்டாரான இவர், மற்ற மொழிகளில் ஹீரோவாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது மற்ற சினிமா ஹீரோக்களே செய்ய மறுக்கும் விஷயமாகும்.
இதனை ஒரு ஆரோக்கியமான முன்னெடுப்பாகவே சினிமா விமர்சகர்கள் பார்க்கின்றனர். தமிழில் இருவர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த மோகன்லாலுக்கு மீண்டும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் அமைந்தது. அதையடுத்து இந்தி திரையுலகில் கால் பதித்த அவர், மீண்டும் ஜில்லா திரைப்படம் மூலம் தமிழில் களமிறங்கினார். கேரளாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய்யுடன், இவர் நடித்த காட்சிகள் இரு மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.