'பிகில்' படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது 'மாஸ்டர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, சஞ்சீவ் என்று இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இப்படம் குறித்து ஏராளமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. முதல் இரண்டு போஸ்டரிலும் விஜய் வித்தியாசமான லுக்கில் காணப்பட்டார். இதனையடுத்து குடியரசு தினத்தை முன்னிட்டு படக்குழு மூன்றாவது போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இதில், விஜய்யும் விஜய் சேதுபதியும் எதிர் எதிரே நின்று ஆக்ரோஷமாக சண்டைக்காட்சியில் கத்துவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல், இரண்டு போஸ்டர்களிலும் விஜய் மட்டும் தனியாக இருந்து வந்தார். இந்த மூன்றாவது போஸ்டரில் விஜய்யும் விஜய் சேதுபதியும் எதிர் எதிரே நிற்பது, அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மட்டுமல்லாது படம் குறித்த எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ்.பி. பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யசூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே '#MasterThirdLook' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இதையும் வாசிங்க: புத்தாண்டுக்கு பர்ஸ்ட் லுக், பொங்கலுக்கு செகண்ட் லுக் - மாஸ் காட்டும் மாஸ்டர்