முகக்கவசம் அணிந்து 'டெனெட்' கண்டுகளித்த டாம் குரூஸ்! - கிறிஸ்டோபர் நோலனின் டெனெட்
லண்டனில் கிறிஸ்டோபர் நோலனின் 'டெனெட்' திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சியில் நடிகர் டாம் குரூஸ் முகக்கவசம் அணிந்து கலந்துகொண்டுள்ளார்.
எழுத்தாளர் - இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரியுடன் ஸ்பை த்ரில்லரான 'மிஷன்: இம்பாசிபிள் 7' திரைப்படத்தில் நடிகர் டாம் குரூஸ் தற்போது நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில் லண்டனில் கிறிஸ்டோபர் நோலனின் 'டெனெட்' திரைப்படம் முன்னோட்ட நிகழ்ச்சியில் நடிகர் டாம் க்ரூஸ் கலந்துகொண்டுள்ளார். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட காணொலி ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படம் தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இந்தக் காணொலி பதிவிட்ட சில மணி நேரங்களில் சமூக வலைதளத்தில் வைரலானது.
ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டிஸன் நடித்துள்ள 'டெனெட்' ஆகஸ்ட் 31ஆம் தேதி அமெரிக்காவின் சில பகுதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.