ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, கலந்துகொண்டு தங்கம் பதக்கத்தை வென்றார்.
இதனையடுத்து, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தும் பரிசுகளும் வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, கோமதி மாரிமுத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் காசோலையை தனது ரசிகர் மன்றம் சார்பில் வழங்கியுள்ளார்.
இந்தக் காசோலையை கோமதிக்கு திருச்சி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் தலைமை மன்றச் செயலாளர் குமரன், மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.
பின் இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் 'லாபம்' படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி தொலைபேசி மூலம் தனது பாராட்டுகளை கோமதிக்கு தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி தொலைபேசி மூலம் உரையாடல் முன்னதாக, தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் 15 லட்சம் ரூபாயும், திமுக சார்பில் 10 லட்சம் ரூபாயும், காங்கிரஸ் சார்பில் ஐந்து லட்சம் ரூபாயும் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.