டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ஜோக்கர். இந்த கதாபாத்திரத்தை பல படங்களில் வில்லனாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் ஜோக்கரின் முன்கதையை யாரும் படமாக்கியதில்லை. முதன்முறையாக ஜோக்கர் உருவான கதையை படமாக்கியிருக்கிறார் டோட் பிலிப்ஸ். ”ஆர்தர் ஃப்ளெக் என்பவர், எப்படி ஜோக்கராக மாறுகிறான்” என்பதை மையமாக வைத்து ‘ஜோக்கர்’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் டோட் பிலிப்ஸ் பேட்டியளித்துள்ளார்.
ஜோக்கரின் முன்கதையைப் படமாக்க தோன்றியது பற்றி டோட் பிலிப்ஸ், "ஜோக்கருடைய சிக்கலான நிலை எனக்குப் பிடித்திருந்தது. அவனுடைய முன்கதையை சொல்வது சுவாரஸ்யமாக இருக்கும் என எண்ணினேன். இதுவரை அதை யாரும் செய்ததுமில்லை, எனவே நானும் ஸ்காட் சில்வரும் இணைந்து இந்த சிக்கலான கதாபாத்திரம் குறித்து விரிவாக எழுதினோம் என்றார்.
ஜோக்கர் கதை குறித்து தொடர்ந்த அவர், "கோத்தமின் நொறுங்கிய சமூகத்தில் வாழும் ஆர்தர் தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என விரும்புகிறான். மற்றவர்கள் கவனத்தைப் பெற ஜோக்கர் வேஷம் போட்டு அலைகிறான், பிறரால் அவமானப்படுத்தப்படுகிறான். உணர்ச்சியற்ற மனநிலைக்கும், கொடூர மனநிலைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறான். பின்னர் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுப்பதாக கதை நகரும்” என்கிறார்.