நடிகர் ரஹ்மான் நடிப்பில் வெளியான 'துருவங்கள் பதினாறு' சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய 'நரகாசூரன்' திரைப்படம் வெளியாகவில்லை.
இதனிடையே தனது மூன்றாவது ப்ராஜெக்டாக கார்த்திக் நரேன் இயக்கியுள்ள திரைப்படம் தான் 'மாஃபியா: சாப்டர் 1'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மாஃபியா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாது படத்தின் டீசரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இயக்குநர் கார்த்திக் நரேனை பாராட்டியிருந்தார்.
'மாஃபியா படம் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் நடிகர் அருண் விஜய் படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், 'மாஃபியா படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டேன். இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் சிறந்ந படமாக இருக்கும். நீங்கள் பார்க்க விருப்பதை பார்க்க என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. ஆர்வமாக உள்ளேன். இதை எனக்கு அளித்த இயக்குநர், தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி' என பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மேலும் அதிகரித்துள்ளது. அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லன் வேடன் ஏற்று நடித்திருந்த அருண் விஜய், அதன்பின் குறிப்பிடும்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். அந்த வகையில் அவர் நடித்துள்ள இந்த மாஃபியா திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை எடுத்து தருமா? என்பதை படத்தின் ரிலீஸுக்கு பின்னரே தெரியவரும்.