எஸ்.பி. பாலசுப்பிரமணியம், நம் அனைவராலும் அன்புடன் பாலு என்று அழைக்கப்படும் 'கான கந்தர்வன்' நம் மனதிலிருந்து நீங்காத ஆயிரக்கணக்கான பாடலைப் பாடியுள்ளார். ஆந்திர மாநிலம், நெல்லூரில் பிறந்து சென்னையில் வளர்ந்த அவர் தமிழ் திரையிசையில் தவிர்க்கமுடியாத சக்தியாக தடம் பதித்தவர். கடந்த 1946ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி, எஸ்.பி. சம்பமூர்த்தி - சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
அவருக்கு இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள். அவரது சகோதரியான எஸ்.பி. ஷைலஜாவும் முன்னணி திரையிசைப் பாடகி ஆவார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-சாவித்ரி தம்பதியனருக்கு சரண் என்ற மகனும் மற்றும் பல்லவி என்ற மகளும் உள்ளனர். இசை மீது தீராக் காதல் கொண்ட பாலு தனது பிள்ளைகளுக்கு பல்லவி, சரணம் (சரண்) என்ற இசை சார்ந்த பெயரையே வைத்துள்ளார் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
சென்னையில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த அவர், கடந்த 1964ஆம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் வெற்றி பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பிரபல பாடகர் கண்டசாலா, இசையமைப்பாளர் கோதண்டபாணி ஆகியோரிடமிருந்து முதல் பரிசைப் பெற்றார். இந்த நிகழ்வே அவரது இசை வாழ்க்கைக்கு தொடக்கமாக இருந்தது. இசையமைப்பாளர் கோதண்டபாணியின் இசையில், கடந்த 1966ஆம் ஆண்டு வெளியான 'மரியாதை ராமண்ணா' திரைப்படத்தில் தனது முதல் பாடலை பாடினார்.
அவரது குருவான கோதண்டபாணியின் பெயரில் இசை ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன் பின்னர் அவரது 54 ஆண்டுகள் திரைப்பயணம் இந்திய திரையிசை வரலாற்றின் சாதனைப் பக்கங்களாக மாறத்தொடங்கியது.
இதுவரை சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எஸ்.பி.பி பாடியுள்ளார். ஒரு கணக்காக இதை எடுத்துக்கொண்டால் நாளொன்றுக்கு இரண்டரை பாடலும், ஆண்டொன்றுக்கு 930 பாடலும் வருகிறது. திரையிசையில் இது யாரும் தொடமுடியாத சாதனையாகத் திகழ்ந்து வருகிறது. 16 இந்திய மொழிகளில் பாடியுள்ள எஸ்.பி.பி. கோண்டு என்ற பழங்குடி மொழி ஒன்றிலும் பாடியுள்ளார் என்பது சுவாரஸ்யமான தகவல்.
கடந்த 1980களில் வெளியான சங்கராபரணம் அவரது திரை வாழ்வில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. காலத்தால் அழியாத இசைக் காவியமான இந்தத் திரைப்படத்திற்கு இன்னொரு ஜாம்பவான் ஆன கே.வி. மகாதேவன் இசையமைத்துள்ளார். எஸ்.பி.பி.யின் வாழ்கையை சங்கராபரணத்திற்கு முன் சங்கராபரணத்திற்குப்பின் என்று கூட பிரித்து வைக்கலாம். இந்த திரைப்படத்திற்குதான் அவர் முதல் தேசிய விருதையும் பெற்றார். அதற்கு அடுத்தாண்டே கமல் நடிப்பில் வெளியாகி நாடு முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய இந்தித் திரைப்படமான 'ஏக் துஜே கேலியே' படத்திற்கு இரண்டாவது தேசிய விருதைப் பெற்றார்.
நாட்டின் அனைத்து முன்னணி இசைமைப்பாளர், பாடகிகள், நடிகர்களுடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார் என்றால் அது மிகையல்ல. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என காலம்கடந்து நாயகர்களில் குரலாக தனித்து நின்றவர் எஸ்.பி.பி.
இசைஞானி இளையராஜாவுடன் எஸ்.பி.பி கொண்ட இசை உறவு தனித்துவம் வாய்ந்தது. கடந்த 1970கள் முதல் 90கள் வரை இளையராஜா இசையில், எஸ்.பி.பி., ஜானகி இணைகள் இடைவிடாது ரசிகர்களை இசைத் தேன் மழையால் நனைய வைத்தன.
தமிழ்நாட்டின் திரை இசை வரலாற்றில் இம்மூவரும் புதுவரலாறு படைத்தனர். தெலுங்கு திரைப்படமான ஸ்வாதி முத்யம், ருத்ரவீணா ஆகியவற்றுக்கு இளையராஜா, எஸ்.பி.பி இருவரும் தேசிய விருது பெற்றனர்.
ஆறு தேசிய விருதுகள், 25 நந்தி விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள், 2011ஆம் ஆண்டில் பத்ம பூஷண் என அவர் சாதனைகளில் அவர் தொடாத உச்சமே இல்லை. பாடல் மட்டுமல்ல டப்பிங் துறையிலும் எஸ்.பி.பி. முக்கியப் பங்காற்றியுள்ளார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், விஷ்ணுவர்த்தன் என முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் அவர் டப்பிங் கொடுத்துள்ளார். பென் கிங்ஸ்லி நடிப்பில் வெளியான காந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற காந்தி கதாபாத்திரத்திற்கு தெலுங்கு டப்பிங் எஸ்.பி.பி.தான் தந்துள்ளார்.
மேலும், 46 திரைப்படங்களுக்கு இசைமைத்துள்ளார். 72 திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக பொறுப்புணர்வு மிக்கவரான பாலு, பல்வேறு பேரிடர் காலங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் முயற்சியாக இசை நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தியுள்ளார். அவர் குரல் மட்டுமல்ல; அவரது வாழ்வும் காலத்தால் அழியாதது.