உலகின் முதல் 3டி தொழில்நுட்ப புராண திரைப்படமான 'குருஷேத்திரம்', தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்திருக்கிறது: அர்ஜுன்! - arjun
இதுவரை இதுபோன்ற ஒரு சண்டை காட்சிகளை நான் பார்த்ததில்லை, நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்திருக்கிறது என்று நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.
இச்சந்திப்பில் கன்னட நடிகர் தர்ஷன், அர்ஜுன், கலைப்புலி தாணு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அர்ஜுன், "எனக்கு தமிழ் திரை உலகில் முதன்முதலாக 85 அடி உயரத்தில் கட்-அவுட் வைத்து ஆக்சன் கிங் என்று பெயர் வைத்தவர் கலைப்புலி எஸ் தாணு. குருஷேத்திரம் படம் ஏற்கனவே கன்னடத்தில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மிகவும் சந்தோஷமாக உள்ளது, எனக்கு எப்போதும் புராணம் போன்ற சப்ஜெக்ட்டுகள் என்னை மிகவும் கவர்ந்து விடுகின்றன. கர்ணன் என்ற கேரக்டர் எனக்கு மிகவும் பிடிக்கும் இருபது வருடங்களுக்கு முன்பு நான் ’கர்ணா’ என்ற சோசியல் படமெடுத்தேன். அந்த அளவுக்கு ’கர்ணா’ என்ற கேரக்டர் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் கூறும்போது கர்ணனாக நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நடிகர் அஜித்தின் ஐம்பதாவது படத்திலும் நான்தான் நடித்தேன். அதேபோன்று கன்னட நடிகர் தர்ஷனின் ஐம்பதாவது படத்திலும் நான் நடிக்கிறேன். படத்தில் வரும் இறுதி சண்டைக் காட்சிகள் அற்புதமாக அமைந்துள்ளது. இதுவரை இதுபோன்ற ஒரு சண்டைக் காட்சிகளை நான் பார்த்ததில்லை, கன்னடத்தில் அதிக பொருட்செலவில் இப்படம் எடுத்திருக்கிறார்கள். இன்றைய தலைமுறையினர் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும். நல்ல படத்தில் நடித்த திருப்தி கிடைத்திருக்கிறது" என்றார்.