இந்த உலகமும், மனிதர்களும் அப்படியே புனிதமோ, சுத்தமோ கிடையாது. உலகத்தில் எவ்வளவு அழுக்கு இருக்கிறதோ, அதேபோல்தான் மனிதனுக்குள்ளும் அழுக்கு இருக்கிறது. இருட்டுதான் ஆதி, வெளிச்சம் என்பது இடையில் வந்தது. அதேபோல்தான் மனிதனிடத்தில் அழுக்குதான் ஆதி, நிரந்தரமும்கூட. அதுவே யதார்த்தம். அந்த யதார்த்தத்தை எவ்வித அப்பழுக்குமின்றி படமாக்கும் வரிசையில் இவரும் ஒருவர் இல்லை. செல்வராகவனுக்கு பின்தான் அந்த வரிசை ஆரம்பிக்கும்.
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின்போது ஏராளமான வசைகளை வாங்கினார். ஆனால், வசைபாட அதில் ஒன்றுமில்லை. பதின் பருவம் என்ன செய்யும். உலக பொருளாதாரத்தைக் குறித்தா சிந்திக்கும். எதிர்பாலின உடலைத்தான் சிந்திக்கும். இன்று வரை மாதவிடாய் ஏற்படும் பெண்களை தீட்டு என ஒதுக்கும் பிற்போக்குத்தனங்கள் சூழ்ந்த, பாலியல் கல்வியை அங்கீகரிக்காத பெரும்பான்மையான மக்களால் அந்தத் திரைப்படத்தை பலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஒருவனை ஒரு சூழல்தான் வளர்க்கிறது. சொல்லப்போனால் நிஜப்பெற்றோர் அந்த சூழல்தான். சிறு வயதிலிருந்தே துன்பத்தை மட்டுமே சந்தித்து வாழ்ந்தவன், சுற்றிலும் கீறலை மட்டுமே சுமந்து வளர்ந்தவனின் மேல் எப்போதாவது சிறு தூறல் விழுந்தால் அந்தத் தூறலை வாழ்க்கை முழுவதும் தனது குடைக்குள் வைத்துக்கொள்ள மட்டுமே அவன் ஆசைப்படுவான். அப்படிப்பட்ட தூறல்தான் வினோத்திற்கு திவ்யா.
அந்தத் தூறலை பாதுகாப்பதற்கான குடையை கோலிவுட் அதுவரை விரிக்காமல் இருந்தபோது செல்வராகவன் மட்டுமே துணிந்து விரித்தார். காதல் சினிமாக்கள் கற்பனைக் குதிரை மேல், நடைமுறைக்கு ஒத்துவராத விஷயங்கள் மேல் பயணித்துக்கொண்டிருந்தபோது செல்வராகவன் வந்து யதார்த்தத்தின் மேல் காதலை அமரவைத்தார். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ’காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்' என்று கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு திரை வடிவம் கொடுத்தார்.
இப்படி ஒரு தலைக் காதலை, அந்தக் காதலனுக்குள் உள்ள பாசத்தை, சபலத்தை படமாக்க முடியுமா என்று யோசித்துக்கொண்டிருந்த சூழலில் 7ஜிக்கு அழைத்துச் சென்று அதைவிட யதார்த்தமான காதலைக் காண்பித்தார். அந்தக் கதிர் தான் யதார்த்த வாழ்வின் காதலன். இன்னும் சொல்லப்போனால் அந்த கதிர்தான் செல்வராகவன் என்று சோனியா அகர்வாலும் கூறியிருக்கிறார். காதலின் அடிப்படை காமம்தான். அதை சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இயற்கை இதுவரை உணர்த்திக் கொண்டிருப்பது அதைத்தான். அதனை முழுதாக உணர்ந்தவர் செல்வராகவன்.